சாலை, சுற்றுலா என.. பட்ஜெட்டில் பீகாருக்கு பெரிய நிதி! நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் சலசலப்பு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், பீகாருக்கு பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்தியில் பாஜக 3.O அரசு ஆட்சியமைத்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் 7வது முறையாக தொடர்ந்து மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "பீகாரில் உள்ள கயாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். சாலை இணைப்புத் திட்டங்களின் மேம்பாட்டிற்கும் மத்திய அரசு ஆதரவளிக்கும். குறிப்பாக பாட்னா-பூர்னியா விரைவுச்சாலை, பக்சர் - பாகல்பூர் நெடுஞ்சாலை, போத்கயா - ராஜ்கிர் - வைஷாலி - தர்பங்கா மற்றும் பக்சரில் கங்கை ஆற்றின் மீது 26,000 கோடி ரூபாய்க்கு கூடுதல் இருவழிப் பாலம் போன்றவை அமைக்கப்படும்.
பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் மத்திய அரசு அமைக்கும். பீர்பைண்டியில் புதிய 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடி ஒதுக்கப்படும்.
பீகார் மாநிலத்தின் காயா பகுதியில் உள்ள விஷ்ணுபாதம் கோயில், மகாபோதி கோயில், நாலந்தா மாவட்டத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றை சுற்றுலாத்துறையின் கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இம்மாநிலத்தில் உள்ள பழமையான கோயில்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். பீகார் மாநிலத்தின் நீர்பாசன, வெள்ளத்தடுப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி ஒதுக்கப்படும்" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்தது. ஆனால், இந்த முறை அப்படி பெற முடியவில்லை. எனவே ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கு கைமாறாக பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications