காலையிலேயே ஷாக் கொடுத்த மத்திய அரசு! சென்னை அருகே சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு
டெல்லி : சென்னையை அடுத்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறுகிய தொலைவுக்குள் அடுத்தடுத்து சுங்கச்சாவடி இருப்பதாக பொதுமக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து கட்டணம் உயர்வதுடன் அத்தியாசிய பொருட்களின் கட்டணம் அதிகரிப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தோடு இதுவும் ஒரு சுமையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சுங்கச்சாவடிகளும் சர்ச்சைகளும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட சுங்கச்சாவடிகளை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஒரு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் சுங்கச்சாவடிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகக்கூறி உயர்நீதிமன்றம் பாதி கட்டணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிட்டது.

மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை
இந்த நிலையில்தான் அண்மையில் மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக தெரிவித்தார். "நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது என்ற விதியை மீறி பல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே 60 கி.மீ. தூரம் இடைவெளி இருக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால், குறுகிய இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. அனைத்தையும் மூட வேண்டும்." என வலியுறுத்தினார்.

நிதின் கட்கரியின் வாக்குறுதி
திருமாவளவனின் கோரிக்கையை தொடர்ந்து மக்களவையில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, "60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதங்களில் மூடப்படும். சுங்கச்சாவடிக்கு அருகே வசித்து வருபவர் ஆதார் அட்டையை காட்டினால் அவர்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு பாஸ் வழங்கப்படும்." என உறுதியளித்தார்.

ஆறுதலுக்கு பின் அதிர்ச்சி
இதனால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்த நிலையில், இன்று சென்னையை அடுத்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. சென்னை மாநகர எல்லைக்குள் வரும் வானகரம், பரனூர், சூரப்பட்டு, சென்ன சமுத்திரம், நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த நிலையில், இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய கட்டண நிலவரம்
அதன் அடிப்படையில் கார், ஜீப், வேனின் ஒருவழி பயணத்துக்கு ரூ.35-ம், ஒருநாளுக்கான இருவழிப்பயணம் ரூ.55-ம், ஒரு மாதத்திற்கான 50 ஒருவழி பயண கட்டண அட்டை ரூ.1,235-ம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேபோல், இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக கூட்ஸ் வாகனம், மினி பேருந்துகளின் ஒருவழி பயணத்துக்கு ரூ.60-ம், ஒருநாளுக்கான இருவழிப்பயணம் ரூ.90-ம், ஒரு மாதத்திற்கான 50 ஒருவழி பயண கட்டண அட்டை ரூ.1,995 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பேருந்து அல்லது லாரிக்கு ஒருவழி பயணத்துக்கு ரூ.125-ம், ஒருநாளுக்கான இருவழிப்பயணம் ரூ.190-ம், ஒரு மாதத்திற்கான 50 ஒருவழி பயண கட்டண அட்டை ரூ.4,185 உயர்த்தப்பட்டு உள்ளது.
கனரக கட்டுமான இயந்திரம், ரோட் ரோலர், மல்டி ஆக்சிஸ் வாகனங்களின் ஒருவழி பயணத்துக்கு ரூ.195-ம், ஒருநாளுக்கான இருவழிப்பயணம் ரூ.295-ம், ஒரு மாதத்திற்கான 50 ஒருவழி பயண கட்டண அட்டை ரூ.6,560 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
7 அல்லது அதற்கும் அதிகமான ஆக்சில்களை கொண்ட பெரிய வாகனங்கள் செல்ல ஒருவழி பயணத்துக்கு ரூ.240-ம், ஒருநாளுக்கான இருவழிப்பயணம் ரூ.360-ம், ஒரு மாதத்திற்கான 50 ஒருவழி பயண கட்டணம் அட்டை ரூ.7.965-ம் உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னையை அடுத்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது:












Click it and Unblock the Notifications