பேரிடர் நிவாரணத்திலும் தமிழகத்தை புறக்கணித்த மத்திய பாஜக அரசு- 5 மாநிலங்களுக்கு மட்டும் விடுவிப்பு
டெல்லி: இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை விடுவிப்பதிலும் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புறக்கணித்துள்ளது. புயல், வெள்ள பாதிப்புகளுக்காக 5 மாநிலங்களுக்கான நிதியை மட்டும் மத்திய அரசு விடுவித்திருக்கிறது. இந்த பட்டியலிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு தர மறுத்து வருகிறது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் புயல், வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெஞ்சல் புயல் பாதிப்புக்காக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு ரூ37,000 கோடி நிதி உதவி கோரியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தற்காலிக நிவாரணம் என்ற அடிப்படையில் ரூ7,033 கோடி நிதி உதவியையும் தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிரந்தர நிவாரண நிதியாக ரூ.12,659 கோடியை கோரியது தமிழ்நாடுஅரசு.
தமிழ்நாடு அரசின் இத்தனை கோரிக்கைகளும் நிலுவையில்தான் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேரிடர் நிதியாக மொத்தம் ரூ1115 கோடியை 15 மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது. அதில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 1554. 99 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில்,
ஆந்திரா- ரூ. 608.08 கோடி
தெலுங்கானா - ரூ.170.99 கோடி
ஒடிஷா - ரூ.255.24 கோடி
தெலுங்கானா- ரூ. 231.75 கோடி
திரிபுரா- ரூ. 288.93 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ18,322.80 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தற்போதும் கூட பெஞ்சல் புயல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு பல முறை மத்திய அரசிடம் நேரிலும் கடிதம் மூலம் வலியுறுத்தியும் தமிழ்நாடு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்காமல் 5 மாநிலங்களுக்கு மட்டுமே விடுவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் விளக்கம் என்ன?
இது தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பு: 2024 ஆம் ஆண்டு மழை வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் உதவி நிதியின் கீழ்(NDRF) ரூ.1554.99 கோடி கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர்களை எதிர்கொண்ட ஐந்து மாநில மக்களுக்கு உதவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.
இந்த நிதியுதவியில் ஆந்திரப்பிரதேசம் ரூ.608.08 கோடியும், நாகாலாந்து ரூ.170.99 கோடியும், ஒடிசா ரூ.255.24 கோடியும், தெலங்கானா ரூ.231.75 கோடியும், திரிபுரா ரூ.288.93 கோடியும் பெறும்.
2024-25 நிதியாண்டில் 27 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் உதவி நிதிக்கு மத்திய அரசு ரூ.18,322.80 கோடி விடுவித்துள்ளது. 18 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து(NDRF) ரூ.4808.30 கோடியும், 14 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிவிப்பு நிதியிலிருந்து(SDMF) ரூ.2208.55 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிவிப்பு நிதியிலிருந்து (NDMF) ரூ.719.72 கோடியும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications