வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள் நிலைமை என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: வங்கதேச நிலைமைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வங்கதேச நிலைமை, இந்தியர்களின் பாதுகாப்பு, இந்துக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் வன்முறைகளாக மாறியதால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பிலும் பலர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது. இதனால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார்.
அத்துடன் ஷேக் ஹசீனாவின் மாளிகையை ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் உயிர் தப்பிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவிலேயே தஞ்சமடைவாரா? இந்தியாவை விட்டு வெளியேறி வேறு ஒரு நாட்டில் அகதியாக அடைக்கலம் கோருவாரா? என்பது உறுதியாகவில்லை.

தற்போது டெல்லி அருகே பாதுகாப்பான இடம் ஒன்றில் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நேற்று இரவே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கதேச நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு தங்களை அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
#WATCH | Delhi: All-party meeting underway in the Parliament on the issue of Bangladesh. EAM Dr S Jaishankar briefs the members of different political parties. pic.twitter.com/4Cl1rFRkyG
— ANI (@ANI) August 6, 2024
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை. இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஷேக் ஹசீனா தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கும் வரை காத்திருக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications