நிதி அமைச்சக ஊழியர்கள் ChatGPT, DeepSeek AI செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு அதிரடி தடை!
டெல்லி: மத்திய நிதி அமைச்சக ஊழியர்கள் AI தொழில்நுட்ப செயலிகளான
ChatGPT, DeepSeek ஆகியவற்றை பயன்படுத்த மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் நிதி அமைச்சக அலுவலக கணினிகளில் டவுன்லோடு செய்யப்பட்ட ChatGPT, DeepSeek செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளிடையே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான AI செயலிகள் உருவாக்கம், பயன்பாடு தொடர்பாக கடும் போட்டி நிலவுகிறது. அண்மையில் சீனாவின் DeepSeek AI செயலி உலக நாடுகளையே மிரள வைக்கும் அளவுக்கு பேசு பொருளாக இருந்தது. AI தொழில்நுட்ப செயலியை இந்தியாவும் உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாக மத்திய அரசும் தெரிவித்திருந்தது.

சீனாவின் DeepSeek AI செயலிக்கு தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் அதிகாரப்பூர்வமாகவும் தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசு, நிதி அமைச்சகத்தின் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ChatGPT, DeepSeek ஆகிய செயலிகளை நிதி அமைச்சக ஊழியர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சகத்தின் கணினிகளில் ChatGPT, DeepSeek ஆகிய AI செயலிகளை நிறுவியிருந்தால் அவை அரசின் தரவுகள், கோப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகும்; ஆகையால் அவற்றை உடனே அலுவலக கணினிகளில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னரே மத்திய அரசு இந்த சுற்றிக்கையை அனுப்பி இருந்ததாம். இதனிடையே OPEN AI தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மான் இந்தியா வருகை தந்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சாம் அல்ட்மானை இன்று சந்தித்து AI தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications