மாற்றம்.. டிசம்பர் 1 முதல்.. சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் வரப்போகிறது புதிய வாசகம்
டெல்லி: டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் புகையிலை பாக்கெட்டுகளில் இடம்பெற்றுள்ள tobacco causes cancer என்ற வாசகமானது மாற்றம் செய்யப்பட்டு புதிய வாசகம் இடம்பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புகைப்பித்தல் உடல்நலத்திற்கு கேடு.. புகைப்பிடிப்பது உயிரைக் கொல்லும் என்ற வாசகம் தியேட்டர்களில் நாம் படம் பார்ப்பதற்கு முன்பு காண்பிக்கப்படும்.
அதன் தீவிரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வாசகமானது காட்டப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்துபவர்கள் யாரும் இதுபற்றி கண்டுகொள்வதே இல்லை.

இளமையில் இறக்கக்கூடும்
புகைப்பிடித்தால் கேன்சர் நோய் வரும் என்றும், இளமையிலே இறக்கக்கூடும் என்பது பலருக்கு தெரியும்படி பலரால் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த புகையிலை பாக்கெட்டுகளில் கூட புகையிலையால் ஏற்படும் ஆபத்து குறித்தும், அதை பயன்படுத்தினால் என்ன நிலைமை ஏற்படும் என்றும் அதில் வாசகமாகவும், விளக்கப்படமாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதன் பாதிப்பு குறித்து அதன் அட்டைப்படத்திலேயே விளக்கி கூறியிருந்தாலும் அதற்கு அடிமையானவர்கள் தொடர்ந்து ஆபத்தை உணராமல் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.

புகையிலை பொருட்கள்
அந்த புகையிலை, பான்மசாலா, சிகரெட் உள்ளிட்ட புகையிலைபொருட்களை பயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று தெரிந்தும் பலர் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இன்று ஒரு நாள் மட்டும். . நாளை ஒரு நாள் மட்டும் என அவர்களது நியாயம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல இதனால் இவ்வளவு பாதிப்பு இருக்கிறது என தெரிந்தும் இதற்கு தடை விதிக்காமல் அரசும் இழுத்தடித்து கொண்டு தான் இருக்கிறது.

புதிய வாசகம்
இந்த நிலையில், பான் மசாலா, புகையிலை, சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள tobacco causes cancer என்ற வாசகத்தை மாற்றி புதிய வாசகம் இடம்பெறும் என்றும், புதிய புகைப்படம் இடம்பெறும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு பேக்கேஜ் செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பாக்கெட்டுகளில் இந்த புதிய வாசகங்கள், படங்கள் வரும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறுகையில், ''புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம் வருகிற டிசம்பர் மாதத்தில் தயாரிக்கப்படும் பாக்கெட்டுகளில் பிரசுரிக்கப்படும் இதுபோல 'இளமையிலேயே இறக்கிறார்கள்' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புகைப்படம் இடம்பெறும்.

சிறைத்தண்டனை
2008-ம் ஆண்டு கொண்டு வந்த சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) மூன்றாவது திருத்த விதிகள், 2022 இன் கீழ் திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். மேலும் இந்த புதிய பாக்கெட்டுகள் ஒரு ஆண்டுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி விற்கப்பட்டால், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை) சட்டம், 2003ன் பிரிவு 20ன் படி சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications