ஆஹா நிம்மதி.. H3N2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு இந்த மாதமே குறையும்.. மத்திய அரசு குட்நியூஸ்!
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எச்3என்2 எனும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் தொற்று காய்ச்சலாக பரவி வருகிறது.
டெல்லி: இந்தியாவில் வேகமாக எச்3என்2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் பருவகால காய்ச்சல் பரவி வருகிறது. தமிழ்நாடு உள்பட ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் எச்3என்2 இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் மார்ச் இறுதியில் குறையும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நல்ல செய்தியை தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் சீசன் காய்ச்சல் எனும் பருவகால காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக 60 வயதுக்கு மேலான முதியவர்களும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளும் இந்த வகயை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காய்ச்சலுக்கு இன்ப்ளூயன்ஸா வகை வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இந்த காய்ச்சல் குணமானாலும் கூட அதற்கு பிறகும் சில நாட்கள் தொடர் இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.

எச்3என்2 வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் தற்போது பருவகாய்ச்சலை இன்ப்ளூயன்ஸா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதில் பல வகையான வைரஸ் பாதிப்பு இருந்தாலும் அதிகமானவர்களை H3N2 வகை வைரஸ் தான் தாக்குகிறது. இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் எச்3என்2 (H3N2)வைரஸால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர எச்1என்1 வகை வைரஸாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 2 பேர் பலி
இந்த வைரஸ் பாதிப்புக்கு இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வறட்சி, காய்ச்சல், உடல் வலி, டயாரியா உள்ளிட்டவை அறிகுறிகளாக உள்ளன. இந்த பாதிப்புக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டாம் என இந்திய மருத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் காரணமாக இந்தியாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் மற்றும் ஹரியானாவை சேர்ந்த ஒருவரின் உயிர்களை இந்த வைரஸ் பறித்துள்ளது.

உற்று கவனிக்கும் மத்திய அரசு
இந்நிலையில் தான் ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிலவும் நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஒருங்கிணைந்த நேய் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசு நாட்டின் நிலைமையை உற்றுநோக்கி வருகிறது.இந்நிலையில் தான் இன்று மத்திய சுகாதாரத்துறை இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த பாதிப்பு நாட்டில் எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மார்ச் இறுதியில் குறைய வாய்ப்பு
நாட்டில் பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. H3N2 வைரஸின் பாதிப்பு, பலியை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இன்ப்ளூயன்ஸா வைரஸின் பருவகால காய்ச்சல் என்பது சுவாசம் சார்ந்த தொற்றாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் இந்த பருவகால காய்ச்சல் ஜனவரி முதல் மார்ச் வரையிலும், அதன்பிறகு மழைக்காலத்துக்கு பிந்தைய காலத்திலும் உச்சம் தொடும். அதன்படி பார்த்தால் மார்ச் இறுதியில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த காய்ச்சல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications