அரசியலா செய்றீங்க? இன்னும் 2 ஆண்டு தான்.. ‛நிலைமை மாறும்’ என மாநில அரசுகளை சீண்டி சீறிய அமித்ஷா
டெல்லி: பயங்கரவாதம், போதைப்பொருள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக பேசினார். அப்போது இன்னும் 2 ஆண்டில் நிலைமை மாறும் என மாநில அரசுகளை சீண்டி அமித்ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனை பற்றி விவாதிக்க கோரி இன்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமித்ஷா பேச்சு
இது ஒருபுறம் இருக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி பேசினார். இந்த வேளையில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என குற்றம்சாட்டி சீறினார். இதுதொடர்பாக அமித்ஷா கூறியதாவது:

மாநிலங்கள் மீது தாக்குதல்
நாட்டில் தற்போது போதைப்பொருள் பிரச்சனை கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் கிடைக்கும் பணத்தின் மூலம் பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர். நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மாநிலங்கள்தான் போதைப்பொருள் விற்பனையையும் ஊக்குவிக்கிறது. அதேபோல் எந்தெந்த மாநிலங்கள் மத்திய அமைப்புகளுக்கு உதவவில்லையோ அவையும் போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிக்கின்றன.

2 ஆண்டுகளில் சிறை..
போதைப்பொருள் கடத்தலை தடுக்க தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுடன் (என்சிபி), தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) இணைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு போதைப்பொருள் தடுப்புக் கொள்கையில் தீவிரமாக உள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அவசியம். ஆனால் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் மாபியாக்கள் இயங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கிரிமினல்கள் எப்படிப்பட்ட பலத்துடன் இருந்தாலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அனுமதி வழங்காத மாநிலங்கள்
எல்லைகள் பாதுகாப்பு மத்திய அரசிடம் உள்ள பொறுப்பு. ஆனால், போதைப்பொருள் கடத்தல் தடுப்பில் எல்லை பாதுகாப்புப் படையினர் சுதந்திரமாக இயங்க முடியாமல் மாநிலங்கள் கெடுபிடி காட்டுகின்றன. எல்லை பாதுகாப்பு படையினருக்கு வழக்குப் பதிவு செய்ய எவ்வித அனுமதியும் மாநிலங்கள் வழங்குவதில்லை. இவ்வாறாக அரசியல் செய்வது போதைப்பொருள் கடத்தலையே ஊக்குவிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications