சிஏஏ ஒருபோதும் வாபஸ் பெறப்படாது.. கறாராக சொல்லும் அமித்ஷா! காங்கிரஸ் வாக்குறுதிக்கு பதிலடி
டெல்லி: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், சிஏஏ-வை திரும்பப் பெற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கறாராக பதிலடி கொடுத்திருக்கிறார்.
பழைய குடியுரிமை சட்டம், இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர்களும் இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது, "சிஏஏ-வை கொண்டு வந்தது பாஜக, பிரதமர் நரேந்திர மோடி. இதனை அவ்வளவு எளிதில் ரத்து செய்ய முடியாது. நாங்கள் இதனை திரும்பப் பெற மாட்டோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அதேபோல நாடு முழுவதும் சிஏஏ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எதிர்க்கட்சிகள் சிஏஏ-வை ரத்து செய்வதாக கூறுகின்றன. ஆனால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. சிஏஏ-வை ரத்து செய்ய விரும்புவோருக்கு இங்கு இடம் கிடையாது.
சிஏஏ-வை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில் அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. நாங்கள் தேச பாதுகாப்பு குறித்து சில முடிவுகளை எடுத்தபோதும் அவர்கள் இதே குற்றச்சாட்டைதான் வைத்தனர். யோசித்து பாருங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது கூட இதைத்தான் சொன்னார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாதா?
சிஏஏ குறித்து நாங்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு சட்டம் வரும் என்று ஏற்கெனவே 2019 லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். எனவே இதில் எந்த குழப்பத்திற்கும் இடமில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒன்று சேர்க்க போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன" என்று அமித்ஷா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications