இலங்கை விவகாரம்: மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரனை தொடர்ந்து எல்.முருகன் இன்று பயணம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சர் முரளிதரனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
இலங்கை பொருளாதார பேரழிவில் சிக்கி தத்தளிக்கிறது. இந்தியாவும் இலங்கைக்கு கடனுதவி வழங்கியது. இருந்த போதும் சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.ன் கடனுதவியையே இலங்கை பெருமளவு நம்பி உள்ளது. இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி வழங்கலாம் எனவும் இந்தியா சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

அதேநேரத்தில் இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசின் வெளிப்படையான நிலைப்பாடு. இன்னொரு பக்கம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களாகிய தமிழர் தாயக நிலப்பரப்பில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் தொழில் நிறுவனங்களை நிர்மாணிப்பதிலும் இந்தியா மும்முரமாக உள்ளது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீண்டும் பெறுவது தொடர்பாகவும் சில முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றிருந்தார். முன்னதாக இலங்கை திருகோணமலை துறைமுகத்துக்கு இந்திய போர்க்கப்பல் சென்றிருந்தது. இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்களை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அதேபோல் தமிழர் தரப்புடனும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரணிலும் ஜெய்சங்கரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, இந்திய தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் தேவைகள் குறித்தும் ஆராய்வது முக்கியம். மாகாண சபைத் தேர்தலை இயலுமான வரை விரைவில் நடத்த வேண்டும். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது முக்கியமானது எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் (பிப்ரவரி 4) பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் முரளிதரன் இலங்கை சென்றிருந்தார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் அடுத்ததாக மத்திய இணை அமைச்சரான தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் நாளை இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை செல்லும் மத்திய இணையமைச்சர், பிப்ரவரி 12-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்படும் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார். இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும். மேலும் வடக்கு மாகாண மக்களின் கலாச்சார உட்கட்டமைப்பிற்கான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது. இந்த மையம் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைய உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் பங்களிப்புடன் மக்கள் நலன் தொடர்பாக இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொள்ள உள்ளார் மேலும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications