இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை அக்-4-ல் சந்திக்கும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லி: இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை கொழும்பில் வரும் 4-ந் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். இலங்கை ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை, சீனாவின் ஆதிக்கம், ஈழத் தமிழர் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் முன்வைப்பார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி எனப்படும் சிங்கள பேரினவாத மற்றும் இடதுசாரி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். சிங்களர் பெரும்பான்மையினராக அனுர குமார திசநாயக்கவையும் தமிழர்கள் பெரும்பான்மையினராக சஜித் பிரேமதாசவையும் தேர்ந்தெடுத்தனர். இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இலங்கையில் இடதுசாரியாளரான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றிருப்பதால் சீனாவுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கக் கூடும் என்கிற அச்சம் உள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே மன்னார் வளைகுடாவில் இந்திய அதானி குழுமத்துக்கு கொடுக்கப்பட்ட காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்தவர் அனுர குமார திசநாயக்க. இந்த திட்டம் முதலில் சீனாவுக்குதான் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் நெருக்கடியால் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனால் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க, அதானி குழுமத்துக்கான காற்றாலை திட்டத்தை ரத்து செய்வார் என்கிற நிலைமையும் உள்ளது.
இந்த பின்னணியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள், அதானி குழுமத்தின் காற்றாலை திட்டத்தின் நிலை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், ஈழத் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாகவும் அனுர குமார திசநாயக்கவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விவாதிக்க இருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications