பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத நிலைக்கு வருகிறதா இந்தியா? நிதின் கட்காரி கொடுத்த முக்கிய அப்டேட்
டெல்லி: புரட்சி என்பது கண்டிப்பாக நடைபெறும். எரிபொருள் இறக்குமதி என்பது இந்தியாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டு நமது பாரதம் தற்சார்பு மிக்கதாக மாறும். இதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.
காற்று மாசுபாட்டை குறைக்க பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதை பல்வேறு நாடுகளும் அதிகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் மின்சாரத்தில் ஓடும் கார்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வரிச்சலுகை, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது.

குறிப்பாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கிரீன் எகனாமி எனப்படும் மாசு ஏற்படுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களை அறவே இல்லாமல் மாற்றுவதே எனது இலக்கு என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிதின் கட்காரி கூறியதாவது:- பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முற்றிலும் இல்லாத நிலையை கொண்டு வருவதே எனது தொலைநோக்கு திட்டமாகும். இதை சாத்தியமா எனக் கேட்கிறீர்கள். 100 சதவிகிதம் அது சாத்தியமே.. இது கொஞ்சம் கஷ்டம்தான்.. ஆனாலும் முடியாது என்பது கிடையாது. இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடியை செலவிடுகிறது.
இந்த பணத்தை விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பயன்படுத்த முடியும். கிராமங்கள் செழிப்பாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஹபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை ரூ- 5 ஆகவும், பிளெக்ஸ் என்ஜின்களுக்கு 12 சதவிகிதமாக திட்டத்துடன் கூடிய முன்மொழிவு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பட்டுள்ளது.
பயோஎரிபொருளை பயன்படுத்துவதன் மூலம், எரிபொருள் இறக்குமதிக்க்கு இந்தியா முடிவு கட்டும். இத்தகைய மாற்றத்திற்கான காலக்கெடு எதையும் நான் கூறவில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் கார்களே இல்லாத நிலை என்பது கடினமானது. ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. வரும் யுகம் மாற்று எரிபொருளுக்கானதுதான்.
டாடா மற்றும் அசோக் லைலாண்ட் நிறுவனங்கள் ஹைட்ரஜனில் இயங்கும் டிரக்குகளை அறிமுகம் செய்துள்ளன. சிஎன்ஜி மற்றும் எல்என்ஜியில் இயங்கும் டிரக்குகளும் உள்ளன. பயோ சிஎன்ஜியை உற்பத்தி செய்ய நாடு முழுவதும் 350 தொழிற்சாலைகள் உள்ளன.
எனவே புரட்சி என்பது கண்டிப்பாக நடைபெறும். எரிபொருள் இறக்குமதி என்பது இந்தியாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டு நமது பாரதம் தற்சார்பு மிக்கதாக மாறும். இதை நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications