மகாராஷ்டிராவில் தேசியவாத காங்- பாஜக கூட்டணி அரசு? கொளுத்தி போட்ட மத்திய அமைச்சர்..அப்போ சிவசேனா நிலை
டெல்லி: பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சந்தித்துப் பேசிய நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
தேசியவதா காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக என்சிபி கூட்டணி
இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் பாஜக -தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பரபரப்பு கருத்தை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு அளிக்கும் ஆதரவை சரத் பவார் விலக்கிக் கொள்ள வேண்டும். பாஜகவும் தேசியவாத காங்கிரசும் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும்" என்றார்.

கருத்தியல்
கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகள் காரணமாக பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேராது என்று சமீபத்தில் தான் என்சிபி மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சரும் நவாப் மாலிக் தெளிவுபடுத்தியிருந்தார். இது குறித்து ராம்தாஸ் அத்வலே கூறுகையில், "சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட வெவ்வேறு கருத்தியல் கொண்டவை தான். ஆனால் அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனரே.

வெளியேற வேண்டும்
பிறகு ஏன் பாஜகவும் என்சிபியும் இணைய முடியாது. பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு வெவ்வேறு பக்கங்களை ஒன்றிணைக்க முயல்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே சரத் பவார் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். காங்கிரஸின் நானா படோல் தொடர்ந்து என்சிபி-க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால் தான் நான் கூறுகிறேன் சரத் பவார் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

சரத் பவார்
சரத் பவாருக்காக மட்டுமே சிவசேனா அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இருந்தாலும்கூட அவர் விரும்பியபடி அங்கு அரசு நடக்கவில்லை. பிரதமரும் சரத் பவாரும் விவசாயிகள் பிரச்சினை குறித்து மட்டுமே பேசியதாக சிவசேனா எம்பி கூறுகிறார். கூட்டணி குறித்து இல்லாமல் விவசாயிகள் குறித்து மட்டும் பேசியிருந்தாலும் இது நல்லது தான். ஏனென்றால் விவசாயிகள் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.

நட்பு தொடரட்டும்
மத்திய அரசின் விவசாயி சட்டங்களைத் திரும்பப் பெறத் தேவையில்லை என்றும் விவசாயிகள் எதிர்க்கும் விஷயங்களை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என இதற்கு முன்னரே கூட சரத் பவார் கூறியுள்ளார். கூட்டணி அல்லது விவசாயிகள் பிரச்சினை என எது குறித்துப் பேசியிருந்தாலும் அவர்கள் நட்பு தொடர வேண்டும் எனது விருப்பம்" எனப் பொடி வைத்துப் பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கடந்த 2019இல் தேர்தல் நடைபெற்றது. அப்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலை ஒரே அணியில் இருந்து எதிர்கொண்ட பாஜக - சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார்.












Click it and Unblock the Notifications