நடிகர், கிரிக்கெட் வீரர்களை விடக்கூடாது! பாகிஸ்தானை தனிமைப்படுத்தனும் - கொந்தளித்த மத்திய அமைச்சர்
டெல்லி: பாகிஸ்தானை முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டும். அங்கிருந்து இந்தியாவுக்கு நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் வரும் நிலையில் அவர்களையும் விடக்கூடாது என மத்திய அமைச்சர் விகே சிங் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் பகுதியில் நேற்று போலீசார் மற்றும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். லஷ்கர் இ-தொய்பா எனும் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

இதில் நம் படைப்பிரிவை சேர்ந்த 2 அதிகாரிகள், ஒரு போலீஸ் அதிகாரி என 3 பேர் வீரமரணமடைந்தனர். அதாவது 19வது ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவின் கமாண்டிங் ஆபிசர், மன்பிரீத் சிங், மேஜர் ரேங்க் அதிகாரி ஆஷிஷ், காஷ்மீர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட் உள்ளிட்டவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் இந்த தாக்குதல் சம்பவம் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பதுங்கி உள்ள தீவிராதிகளை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் முன்னாள் ராணுவ ஜெனரலும், தற்போதைய மத்திய அமைச்சருமான விகே சிங் பாகிஸ்தானை மொத்தமாக தனித்து விட வேண்டும் என முழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: நாம் இப்போது ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் தற்போது பாகிஸ்தானை தனிமைப்படுத்தாவிட்டால் அவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். அதோடு நாம் அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அழுத்தம் உருவாகும். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்.
மேலும் இருநாடுகள் இடையே சாதாரணமான நிலையை உருவாக்கும் வரை சுமூகமான உறவை ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இதனால் பாகிஸ்தானை தனித்து விட வேண்டும். தற்போதைய சூழலில் சில சமயங்களில் சினிமாக்காரர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருகிறார்கள். அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்து இந்தியா வருகின்றனர். இருப்பினும் நாம் பாகிஸ்தானை தனித்து விட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது'' என்றார்.
மத்திய அமைச்சரான விகே சிங் பிரதமர் மோடி அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமான துறையின் இணையமைச்சராக இருக்கிறார். இவர் நம் ராணவத்தில் 4 ஸ்டார் கொண்ட ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து 2014ல் முதல் முறையாக எம்பியானார். உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். தற்போது அந்த தொகுதியில் 2வது முறையாக வென்று மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications