ஜி20 மாநாட்டில் சத்தமின்றி சாதித்த இந்தியா.. யூஏஇ செயலால் 'நோஸ் கட்' அதிர்ந்து பார்க்கும் பாகிஸ்தான்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பாகிஸ்தானின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகமே அங்கீகரிக்கும் வகையில், செயல்பட்டு இருப்பது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜி 20 உச்சி மாநாடு அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது. இந்த ஜி 20 உச்சி மாநாட்டில், இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டன.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு நேரடி சவாலாக இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஜி 20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த வழித்தடம் சுமார் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதையாக உள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல்கள் ஜெர்மனியை சென்றடைய தற்போது 36 நாட்கள் ஆகிறது.
புதிய பொருளாதார வழித்தட திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 14 நாட்களில் இந்தியாவில் இருந்து சரக்குகள் ஜெர்மனி சென்றடையும். இதனால், வர்த்தகம் அதிகரிப்பதோடு, பொருளாதாரமும் மேலும் வலுப்பெறும். பொருளாதார அடிப்படையில் இந்த திட்டம் மிகப்பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பது ஒருபக்கம் இருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகளை அங்கீகரிக்கும் வகையிலான இந்தியாவின் முயற்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் சாயிப் பின் சையது அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஜி 20 மாநாட்டில் பொருளாதார வழித்தட பாதை பற்றிய அறிவிப்பு குறித்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார பாதை செல்வதை குறிப்பிடும் வகையிலான வரைபட காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டும் வீடியோவை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரே பகிர்ந்து இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீண்ட காலமாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டு இருப்பது ராஜாங்க ரீதியில் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications