‛‛அத்வானிக்கே நோ சான்ஸ்’’.. ஆனால் மோடிக்காக விதியை தளர்த்தும் பாஜக? அமித்ஷா கூறிய முக்கிய மேட்டர்!
டெல்லி: பாஜகவை பொறுத்தமட்டில் 75 வயது நிரம்பிய தலைவர்கள் மத்திய, மாநில அரசுகளில் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்ற எழுதப்படாத விதி பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடிக்காக இந்த விதியில் 10 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்பட உள்ளதா? என்ற கேள்வி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கிளம்பி உள்ளது.
பாஜகவை பொறுத்தமட்டில் எழுதப்படாத விதியாக ஒன்று உள்ளது. அதாவது பாஜகவின் மூத்த தலைவர்கள் யாராக இருந்தாலும் கூட 75 வயதை கடந்துவிட்டால் மத்திய,, மாநில அரசுகளில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்பது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த விதியின் காரணமாக தான் பாஜகவை கட்டியெழுப்பிய எல்கே அத்வானிக்கே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது அவர் ஓய்வில் உள்ளார். அதேபோல் முரளி மனோகர் ஜோஷி உள்பட பல முக்கிய தலைவர்களை நாம் கூறலாம்.
75 வயது நிரம்பியோருக்கு ஓய்வு வழங்கும் முறை என்பது பாஜகவில் 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு தான் அமலுக்கு வந்தது. பிரதமர் மோடியும், பாஜக தலைரவாக இருந்த அமித்ஷாவும் இதில் மிகவும் உறுதியாக செயல்பட்டு வந்தனர். இத்தகைய சூழலில் தான் இந்த எழுதப்படாத விதி என்பது பிரதமர் மோடிக்காக தளர்த்தப்பட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக இன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு தான் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.
அதாவது அமித்ஷா இன்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு நல்ல பணிகளை செய்துள்ளது. இதன்மூலம் பிரதமர் மோடி அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்பார்'' என கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு தற்போது 73 வயது ஆகிறது. அப்படி பார்த்தால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எந்த பொறுப்பையும் வகிக்க கூடாது.
ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி தான் 3வது முறையாக முன்னிறுத்தப்படுகிறார். இத்தகைய சூழலில் தான் அடுத்த 10 ஆண்டுகள் பிரதமர் மோடி பிரதமராக நீடிப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். இதனால் 75 வயதுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளில் பாஜக மூத்த தலைவர்களுக்கு பொறுப்பு வழங்காமல் ஓய்வு அளிக்கும் முடிவில் பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவை பொறுத்தமட்டில் 75 வயது தாண்டியதால் அத்வானி ஓரம்கட்டப்பட்டாலும் கூட கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு பாஜக ஆட்சியை அமைத்தது. அப்போது 75 வயதை தாண்டிய எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் 2 ஆண்டுக்குள் பதவி பறிக்கப்பட்டு பசவராஜ் பொம்மையிடம் வழங்கப்பட்டது.
கர்நாடகாவை பொறுத்தவரை பாஜகவின் முகமாக எடியூரப்பா இருந்தார். இதனால் அவருக்கு 75 வயதை தாண்டியும் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் பிரதமர் மோடிக்கு தற்போதும் அதிக செல்வாக்கு உள்ளது. இதனால் 75 வயதை கடந்தும் கூட பிரதமர் மோடிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம். அதனை தான் இன்று அமித்ஷா வெளிப்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications