கெஜ்ரிவால் கைது மட்டுமல்ல.. காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கமும் எங்களுக்கு தெரியும்! அமெரிக்கா
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டித்திருந்தது. இந்நிலையில், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மட்டுமல்லாது காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
அதாவது, "நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் அனைத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்ற இந்தியக் குடிமக்களைப் போலவே கெஜ்ரிவாலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்குத் தகுதியானவர்" என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை கூறியிருந்தது.
அதேபோல, "அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்" என அமெரிக்கா கூறியிருந்தது.
ஜெர்மனின் கருத்துக்கு, வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்த இந்தியா, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. அதேபோல, அமெரிக்காவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செயல் துணை தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு நேரில் ஆஜராகுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
சம்மனையடுத்து ஆஜராகியிருந்த குளோரியாவிடம், சுமார் 40 நிமிடங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. மேலும், இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து, இது ஆரோக்கியமற்ற முன்னுதாரணம் மற்றும் தேவையற்றது எனவும் கறாராக கூறிவிட்டது.
இப்படி இருக்கையில் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் விளக்கமளித்துள்ளார். "அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். வங்கி கணக்குகள் முடக்கம் என்கிற காங்கிரஸ் குற்றச்சாட்டையும் நாங்கள் அறிவோம். இந்த பிரச்னைக்கு நியாயமான, வெளிப்படையான சட்டச் செயல்முறைகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் வெளிப்படையாக பேசியதை யாரும் எதிர்க்க வேண்டும் என நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கருத்துக்கள் மத்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications