6ஜி இன்டர்நெட் சேவை.. இந்திய நிறுவனங்களுக்கு விற்க கூடாது! அமெரிக்க கார்ப்பரேட்டுகள் முட்டுக்கட்டை
டெல்லி: உலகம் முழுவதும் 6ஜி இணைய சேவைக்கு தயாராகி வருகிறது. இப்படி இருக்கையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 6ஜி இன்டர்நெட் சேவையை வழங்க கூடாது என்று அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
6ஜி இணைய சேவையை உரிமத்துடன் விற்கலாம் என்றும், உரிமம் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் வாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் இயங்கும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தற்போது 5g இணைய சேவையை உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றன.

அதாவது இந்த அலைக்கற்றையை அரசாங்கம் ஏலத்தில் விடும். அதை ஏலத்திலிருந்து எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி பொதுமக்களிடம் அதற்கான கட்டணத்தை இந்நிறுவனம் வசூலித்து வருகின்றன.
ஆனால் அமெரிக்காவின் ஆப்பிள், அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள், 6ஜி சேவையை மொபைல் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கு பதில், வைஃபை சேவைக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
- 400MHz
- 300MHz
- 500MHz
என மூன்று வகையாக இந்த 6ஜி சேவை பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலில் உள்ள 400MHz உடனடியாக ஏலம் விடவும், 300MHz 2030க்குள் ரெடியாகும் என்றும், 500MHz வைஃபை சேவைகளுக்கு வழங்கலாம் என்றும் அரசு யோசித்து வருகிறது. இது நியாயமான யோசனைதான். ஆனால் பிரச்சனை என்னவெனில், ஜியோ நிறுவனம், அலைக்கற்றையை இப்படி 3 ஆக பிரிப்பதை ஏற்கவில்லை. மாறாக மூன்றையும் சேர்த்து 1200MHz ஆக ஏலத்தில் விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இந்த ஏலத்தை ஒத்தி வைக்க வேண்டும். மக்களிடம் 6ஜி இணைய சேவையை கொண்டு சேர்க்கும் அளவுக்கு டெக்னாலஜி இன்னும் முழுமையாக ரெடியாகவில்லை என்று கூறியுள்ளது.
அலைக்கற்றையை முழுமையாக ஏலத்தில் விட வேண்டும் என்று ஜியோ நிறுவனம் கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சேவையை பல்க் அமௌன்ட் கொடுத்து எடுத்து அதை மக்களுக்கு விநியோகம் செய்து, அதன் மூலம் கட்டணம் வசூலிப்பதே ஜியோ நிறுவனத்தின் நோக்கம். அதேபோல அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையை வைஃபை சேவைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்பதற்கும் காரணம் இருக்கிறது.
வைஃபை சேவையை எந்த நிறுவனங்கள் வேண்டுமானாலும் வழங்கலாம். உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கூட இந்த சேவையை வழங்கலாம். இதற்காக அரசாங்கத்திடமிருந்து ஸ்பெஷல் அனுமதி வாங்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. இப்படி வைஃபை மூலம் அதிவேக இணைய சேவை கிடைத்தால் மெட்டா நிறுவனத்தின் விஆர் (விரிச்சுவல் ரியாலிட்டி) ஹெட்செட்கள் மிக சுலபமாக இயங்கும். தற்போதைய 5g இணைய வேகம் இதற்கு போதுமானதாக இல்லை.
அதேபோல ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக், இன்டெல் சிப் கொண்ட லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் 4k அல்லது 8k தரத்தில் வீடியோக்களை ஒளிபரப்ப 5 ஜி இணைய சேவை போதுமானதாக இல்லை என்று திணறுகிறது. 6ஜி இணைய சேவை கிடைத்தால் இந்த வீடியோக்களை தரமாக ஒளிபரப்ப முடியும். அமேசான் நிறுவனம் தனது தயாரிப்பான அலெக்ஸா, ரிங் கேமராக்கள், ஸ்மார்ட் சென்சார்கள் போன்றவற்றை இயக்க 6ஜி இணைய சேவையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வந்து அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்க முடியாது. இதற்காக மிகப்பெரிய தொகையை செலவழிக்க வேண்டியது வரும். எனவேதான் 6ஜி இணைய சேவையை, வைஃபை சேவைகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications