பாஜக கூட்டணிக்கு வாங்க.. மீண்டும் ராஜ்ய சபா எம்பி ஆகலாம்.. வைகோவை அழைத்த ராம்தாஸ் அத்வாலே!
டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகலாம் என்று மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசி இருக்கிறார். வைகோவை வழி அனுப்பி வைக்க விரும்பவில்லை என்று கூறிய ராம்தாஸ் அத்வாலே, அவரின் பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு முக்கியம் என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம், எம்எம் அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்பி-க்கள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த 6 எம்பி-க்களில் பி.வில்சன் மட்டுமே மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதன் காரணமாக கடைசி நாளான இன்று தமிழக எம்பி-க்கள் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் நிகழ்த்தினர். அப்போது வைகோ பேசுகையில், என்னை முதல்முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி தெரிவித்தார். முன்னதாக வைகோ குறித்து குடியரசு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்று கூறினார்.
திமுக தரப்பில் மீண்டும் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான விருப்பத்தை வைகோ வெளிப்படுத்தி இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைகோவுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்ட போது, மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் பேச்சு கவனத்தைப் பெற்று வருகிறது.
ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், வைகோவை வழி அனுப்பி வைக்க நான் விரும்பவில்லை. அவரால் மாநிலங்களவைக்கு மீண்டும் வர முடியும். அவர் எங்களுடன் கூட்டணி வைத்தால், மீண்டும் மாநிலங்களவைக்கு வரலாம். தமிழ்நாட்டிற்கு அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரை வழி அனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறினார்.
நாடாளுமன்றத்திலேயே ராம்தாஸ் அத்வாலே வைகோவை பாஜக கூட்டணிக்கு அழைத்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்க பாஜக ஒப்புக் கொண்டதால், கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
தற்போது நாடாளுமன்றத்திலேயே பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் வைகோ மீண்டும் எம்பி ஆகலாம் என்று கூறி இருக்கின்றனர். இதனால் மதிமுக - திமுக உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக வைகோ செயல்பட்டுள்ள நிலையில், 5வது முறையாக மாநிலங்களவை வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications