ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிராக அன்று ர(த்)த யாத்திரை- இன்று கரிசனமா? பாஜக மீது திருமாவளவன் அட்டாக்
டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி, OBC) 27% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அன்று ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய பாஜகதான் இன்று அதே ஓபிசியினர் இடஒதுக்கீட்டுக்கு கரிசனம் காட்டுகிறது என்று லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக சாடினார்.
மருத்துவ படிப்புகளில் மாநிலங்கள், அகில இந்திய கோட்டாவுக்கு வழங்கும் இடங்களிலும் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது கோரிக்கை. ஆனால் மத்திய அரசுகள் கடந்த 10 ஆண்டுகளாக இதனை செயல்படுத்த மறுத்து வந்தன. இதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு இதனை செய்ய மறுத்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும் அகில இந்திய கோட்டாவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்கவும் திமுக வலியுறுத்தியது. இது மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

லோக்சபாவில் ஓபிசி மசோதா
இதனால் வேறுவழியே இல்லாமல் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டாவில் இந்த ஆண்டே ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்னொரு நகர்வாக, ஓபிசி பட்டியலில் ஜாதிகளை சேர்க்கிற, நீக்குகிற அதிகாரங்களை மாநிலங்களுக்கே மீண்டும் வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்தத்தையும் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவும் தமிழகத்தின் கோரிக்கைதான்.

உ.பி. தேர்தலுக்காக..
இப்படி அடுத்தடுத்து ஓபிசி பிரிவினரை குறிவைத்து மத்திய பாஜக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பதே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்காகத்தான்.. அதுவும் குறிப்பாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப்பிரதேசத்தில் ஓபிசி வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு வழக்கமாக போய்க் கொண்டிருப்பதை பாஜக பக்கம் திருப்புகிற யுக்திதான் இது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் ஓபிசியினர் நலன், மாநில உரிமைகள் என்ற அடிப்படையில் மத்திய அரசின் முடிவுகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ரத்த யாத்திரை நடத்திய பாஜக
இதனிடையே ஓபிசி மசோதா மீது லோக்சபாவில் தொல். திருமாவளவன் நேற்று பேசியதாவது: இந்த அரசு ஓபிசி சமூகத்தினரின் நலன்களுக்கான அரசு; மாநில உரிமைகளைப் பாதுகாக்கிற அரசு என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் எந்த வகையிலும் இந்திய மக்கள் இந்த அரசை நம்பமாட்டார்கள் என்பதை உறுதியோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு, ஓபிசி மக்களுக்கு 27% இடஒதுக்கீட்டை வழங்க முன்வந்த போது மிகப் பெரிய வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்ட கட்சி எது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். விளிம்புநிலை சமூகத்தினருக்கு ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று மிகப் பெரிய அளவில் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது மட்டும் அல்லாமல் ரத யாத்திரை என்ற பெயரில் ஒரு ரத்த யாத்திரையை நடத்திய கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி.
Recommended Video

50% உச்சவரம்பை தகர்க்க திருத்தம்
சமூக நீதிக்கு எதிரான கட்சி. தலித் மற்றும் பழங்குடி மக்கள், ஓபிசி சமூகத்தினருக்கு எதிரான கட்சி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். என்றாலும் இன்றைக்கு மாநில அரசுகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மசோதாவை நாம் வரவேற்பதற்கு காரணம் ஓபிசி மக்களின் நலன்கள் மிக மிக முக்கியம் என்பதால்தான். பெகாசஸ் தொடர்பான விவாதத்தைக் கூட தள்ளிவைத்துவிட்டு அந்த கோரிக்கைகளை கூட தள்ளிவைத்துவிட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவாதத்தில் பங்கேற்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். உண்மையிலேயே இந்த அரசுக்கு சமூக நீதியின் மீது அக்கறை இருக்குமேயானால் உச்சநீதிமன்றம் விதித்திருக்கிற (இடஒதுக்கீடு) 50% உச்சவரம்பை தகர்த்து எறியும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்திலே திருத்தம் கொண்டுவர வேண்டும். எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிற இந்த அரசு, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கு சட்டம் நிறைவேற்ற வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிற எஸ்.சி, எஸ்.டி. மக்களுக்கான இடஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications