டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் அத்வானி.. உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பாஜக மூத்த தலைவர் அத்வானி குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே அத்வானிக்கு (96) வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு திடீரென அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அத்வானிக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அடுத்த நாளான 27 ஆம் தேதியே வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அத்வானிக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அத்வானி. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அத்வானி உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அத்வானி உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையும் வெளியிட்டது. அதில், பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானிம் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அத்வானி உடல்நிலை தேறிய நிலையில் இன்று மாலை 5 மணியளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் வழக்கமான மருத்துவ வசதிகளோடு அத்வானி ஓய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அத்வானி, பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவின் அகில இந்திய தலைவராக நீண்டகாலம் பணியாற்றி உள்ளார். அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி, அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015 ஆம் ஆண்டு எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அண்மையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அத்வானிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications