ஹைகோர்ட் சொன்னது போல் கரூரில் இருந்து விஜய் தப்பித்துச் செல்லவில்லை! சுப்ரீம் கோர்ட்டில் தவெக வாதம்
டெல்லி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையின்போது 41 பேர் பலியான நிலையில் விஜய் அங்கிருந்து தப்பி வரவில்லை. போலீஸார் அறிவுறுத்தலின் பேரில்தான் அவர் வெளியேறினார் என உச்சநீதிமன்றத்தில் தவெக வாதம் செய்துள்ளது.
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துவிட்ட நிலையில் அந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், "கரூரில் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களுக்கு தவெக சார்பிலும் கட்சி தொண்டர்கள் சார்பிலும் அவசர, மருத்துவ உதவிகள் தாமதமின்றி உடனடியாக வழங்கப்பட்டன.
நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் தப்பியோடிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை. எனவே இந்த கரூர் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியே வரும்" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணன், அரிமா சுந்தரம் ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.
அவர்கள் தங்கள் வாதத்தில், "கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத விஜய் மீது ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தவெக தலைவர் மீது பல்வேறு கருத்துகளை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
கரூரில் உயிரிழப்புகள் நடந்ததும் காவல் துறையினர்தான் அங்கிருந்து வெளியேறுமாறு விஜய்க்கு அறிவுறுத்தினார்கள். மேலும் போலீஸ் பாதுகாப்புடன்தான் விஜய் வெளியேறினார்.
இப்படியிருக்கும் நிலையில் விஜய் கரூரில் இருந்து தப்பியோடி வந்துவிட்டார் என ஹைகோர்ட் நீதிபதி கூறியிருந்தார். நெரிசல் பகுதியில் விஜய் இருந்தால் மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால்தான் காவல் துறை அதிகாரிகள் விஜய்யை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
அது போல் அவர்கள் அறிவுறுத்திய வழியில்தான் விஜய்யின் பரப்புரை வாகனம் வெளியேறியது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஹைகோர்ட் நீதிபதியோ, "எல்லா கட்சியினரும் கரூர் சம்பவ இடத்தில் இருந்த போது தவெகவினர் எங்கே சென்றனர்" என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது போல் எங்களிடம் விசாரணையே நடத்தாமல் விஜய் மீதும் தவெக மீதும் ஹைகோர்ட் நீதிபதி கருத்துகளை முன் வைத்தது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு தவெக தரப்பின் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தவெக வழக்கறிஞர்கள் கூறுகையில், காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு நாங்கள் எதிர்க்கிறோம். அந்த குழு மீது எங்கள் குறைந்த அளவுக் கூட நம்பிக்கை இல்லை. எனவே இந்த சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும் என்றால் ஓய்வு பெற்றஉச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications