சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி!
டெல்லி: சீனாவுக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் கே. துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விக்ரம் துரைசாமி இப்போது பிரிட்டனின் தூதராக பணியாற்றி வருகிறார். இந்தியா சீனா இடையேயான உறவு இப்போது மெல்லச் சீராகி வரும் சூழலில் விக்ரம் துரைசாமி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா சீனா இடையே 2020ல் கல்வானில் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகள் அப்படியே இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு இரு நாட்டு உறவில் திருப்பம் ஏற்பட்டது. பிரச்சனைகள் களைந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மெல்லச் சீராகி வருகிறது.

சீன தூதர்
இந்தச் சூழலில் தான் சீனாவுக்கான இந்தியத் தூதராக விக்ரம் கே. துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது பிரிட்டனில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றும் துரைசாமி விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என இன்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது பிரதீப் குமார் ராவத் சீனாவிற்கான இந்தியத் தூதராக உள்ளது குறிப்பிடத்தக்கது..
விக்ரம் துரைசாமி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி. தந்தை ராணுவ வீரர் என்பதால் அடிக்கடி பணியிட மாற்றத்தை எதிர்கொண்டார். இதனால் இவரும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி கற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகையாளராக ஓராண்டு பணியாற்றிய பின்னரே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாரானார்.
யார் இவர்?
இந்திய மொழிகள் மட்டுமின்றி, சீன மொழி, பிரஞ்சு மற்றும் கொரியன் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் துரைசாமி, 1992ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார். பயிற்சிக்குப் பிறகு, முதலில் மே 1994இல் ஹாங்காங்கில் உள்ள இந்திய ஆணையத்தில் மூன்றாவது செயலாளராகப் பதவியேற்றார். செப்டம்பர் 1996இல் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
முக்கிய பணிகள்
2000ஆம் ஆண்டில் டெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குத் திரும்பிய இவர், மரபுசார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்த பிறகு, 2002இல் பிரதமர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் தனிச் செயலாளராகப் பதவி வகித்தார். அதன் பிறகு பல்வேறு பணிகளை ஆற்றிய அவர், 2012 முதல் 2014 வரை வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்காக்கள் பிரிவின் இணைச் செயலாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 2014இல் உஸ்பெகிஸ்தானுக்கான இந்தியத் தூதராகவும் 2015ல் தென்கொரியாவின் சியோலில் இந்தியத் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.
மேலும், இவர் வங்கதேசத்திற்கான இந்திய உயர் தூதராகவும் அவர் பணியாற்றினார். அவர் வங்கதேசத்தில் இருந்தபோது தான், அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது தான் குஷியாரா ஆற்றின் நீர் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது 1996 கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தமாகும்.
பிரிட்டன்
அதைத் தொடர்ந்து டிசம்பர் 2022இல், விக்ரம் துரைசாமி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் பிரிட்டன் இந்தியத் தூதராகச் சேர்ந்தார். இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர், மன்னர் சார்லஸ் III இருக்கும்போது பதவியேற்ற முதல் இந்தியத் தூதர் இவர்தான். இந்தியா பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இவர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தச் சூழலில் தான் இப்போது அவர் சீனாவுக்கான உயர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா சீனா இடையே உறவு இப்போது சீராகி வரும் நிலையில், விக்ரம் துரைசாமி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இது இரு தரப்பு உறவுகளை மேலும் விரைவில் சீராக்க உதவும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications