நாடு முழுவதும் அமலுக்கு வந்தது வக்பு வாரிய சட்டம்.. அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து வக்பு வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் விதமாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வக்பு வாரிய சட்டம் இன்று முதல் (ஏப்ரல் 8) அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெரும் பணக்காரர்கள், ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இந்த சொத்துகள் 'வக்பு சொத்துகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த வக்பு சொத்துக்கள் நாடு முழுவதும் உள்ளன.

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வக்பு சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம், மசூதிகள் பராமரிக்கப்படுகிறது, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தான் வக்பு சொத்துக்களை முறைப்படுத்தி நிர்வகிக்க கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் கடந்த 1995 ஆம் ஆண்டு புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, கடந்த 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்து மசோதா ஒன்றை தயாரித்தது.
இந்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு இந்த மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியது. இதனையடுத்து இந்த மசோதாவானது ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் இந்த மசோதா சட்டமாக அமலாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது. சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் விதமாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வக்பு வாரிய சட்டம் இன்று முதல் (ஏப்ரல் 8) அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications