எந்த மாநிலத்தில் எவ்வளவு வக்பு சொத்துகள் உள்ளன? டாப் இடத்தில் சர்ப்ரைஸ்! தமிழகம் எந்த இடம் தெரியுமா?
டெல்லி: வக்பு வாரிய சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே நமது நாட்டிலேயே எந்த மாநிலத்தில் அதிக வக்பு வாரிய சொத்துகள் உள்ளன.. எந்த மாநிலத்தில் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் அந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு மாநிலத்திலும் வக்பு அமைப்புக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம்.. தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
வக்பு வாரியம்
இந்தியாவில் இப்போது வக்பு வாரியம் தான் அதிக எண்ணிக்கையிலான நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் அரசு சாரா அமைப்பாகும். நமது நாட்டில் எத்தனை மாநிலத்தில் வக்பு வாரியத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சகம் அளித்த தகவலின்படி நாட்டில் உள்ள 30 மாநிலங்களில் மொத்தம் 8.8 லட்சம் வக்பு சொத்துகள் உள்ளன. அதில் சுமார் 73,000க்கும் மேற்பட்டவை சிக்கலில் இருக்கிறதாம். புதிய வக்பு வாரிய மசோதா மூலம் அந்த பிரச்சினை தீர்க்கப்படலாம் என்கிறது மத்திய அரசு.
ஹைதராபாத்தில் மதிப்பு அதிகம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களை எடுத்துப் பார்த்தால் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை வக்பு தலைநகர் என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட வக்பு சொத்து இங்கு தான் இருக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான மெக்கா மசூதி மற்றும் சார்மினார் அருகே உள்ள வணிகப் பகுதிகள் எனப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக இருக்கிறது. இவை அனைத்தும் நிஜாம்களால் பரிசாக வழங்கப்பட்டதாகும்.
மாநிலம் வாரியாக
மதிப்பு கொண்ட வக்பு சொத்து ஹைதராபாத்தில் அதிகம் என்றாலும் அதிக எண்ணிக்கையில் வக்பு சொத்துகளைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. அங்கு மொத்தம் 2.4 லட்சம் வக்பு வாரிய சொத்துகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வக்பு சொத்துகளில் 27% ஆகும். உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 80,480 வக்பு சொத்துகள் உள்ளன. அதாவது ஒட்டுமொத்த வக்பு சொத்துகளில் 9% மேற்கு வங்கத்தில் உள்ளது.
தமிழகம் எங்கே
தொடர்ந்து பஞ்சாப் 75,511 (9 சதவிகிதம்) வக்பு வாரிய சொத்துகளைக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 66,092 (8 சதவிகிதம்) வக்பு வாரிய சொத்துக்களும், கர்நாடகாவில் 65,242 (7 சதவிகிதம்) வக்பு வாரிய சொத்துகளும் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டுமே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்பு வாரிய சொத்துகள் உள்ளன.
தொடர்ந்து கேரள மாநிலத்தில் 6 சதவிகிதம் அதாவது 53,282 வக்பு வாரிய சொத்துகள் உள்ளன. தெலுங்கானாவில் 45,682 வக்பு சொத்துகள், அதாவது ஒட்டுமொத்த வக்பு சொத்தில் 5 சதவிகிதம் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 39,940 அதாவது 5 சதவிகித வக்பு சொத்துகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டுமே சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு தனித்தனியாக வக்பு சொத்துகள் உள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த வக்பு வாரியங்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னவாக உள்ளது
மொத்தமுள்ள 6.2 லட்ச வக்பு சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவை கல்லறைகள், விவசாய நிலங்கள், மசூதிகள், கடைகள் அல்லது வீடுகளாக உள்ளன. குறிப்பாக நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வக்பு சொத்துக்களில் சுமார் 17.3% கல்லறைகள் மட்டும் ஆகும். விவசாய நிலம் மற்றும் மசூதிகள் முறையே 16% மற்றும் 14% ஆக உள்ளன.












Click it and Unblock the Notifications