வக்பு வாரிய மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.. ஆதரவு 288- எதிர்ப்பு 232.. நள்ளிரவு வரை விவாதம்
டெல்லி: வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று அதிகாலை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. நள்ளிரவு 12 மணி வரை கடும் விவாதம் நடந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இனி அடுத்ததாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட உள்ளது. அப்படி நிறைவேறினால் இந்தியா முழுவதும் சட்டமாக அமலுக்கு வரும்.
பல 100 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கியிருந்தார்கள். இந்த சொத்துகள் 'வக்பு சொத்துகள்' என்று அழைக்கப்படுகின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய், மசூதி பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்த சொத்துகளை முறைப்படுத்த கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் தான் தற்போது வரை அமலில் இருக்கிறது.
வக்பு வாரிய மசோதா
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, 1995-ம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து சட்டமாக்க முடிவு செய்தது. இந்த திருத்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு சென்றது. இதில் மசோதா மீது ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
மசோதா தாக்கல்
பின்னர் இந்த திருத்தங்களுடன் புதிய மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.இந்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார்கள். எனினும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்புக்கு நடுவே மசோதாவை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு தலையிடாது
அப்போது அவர் கூறும் போது, எந்த மதத்தின் மீதும் மத்திய அரசு தலையிடப்போவது இல்லை. வக்பு சட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மாற்றங்கள், மற்ற சட்டங்களை விட அதற்கு மேலான விளைவைக் கொடுத்தன. எனவே புதிய திருத்தங்கள் தேவைப்பட்டன. உலகிலேயே அதிகமான வக்பு சொத்துகள் இந்தியாவில் இருக்கின்றன. ரயில்வே, ராணுவத்துக்குப்பிறகு அதிக அளவிலான சொத்துகளை வக்பு கட்டுப்படுத்துகிறது. ரயில்வே மற்றும் ராணுவத்துக்கான சொத்துகள் நாட்டுக்கு சொந்தமானவை. ஆனால் வக்பு சொத்துகள் அனைத்தும் இயற்கையிலேயே தனியாருடையவையாக உள்ளன.
வாக்கு வங்கி அரசியல்
எனவே ரயில்வே மற்றும் ஆயுதப்படைகளின் நில வங்கியை, வக்பு சொத்துகளுடன் ஒப்பிடுவது நல்லது கிடையாது. மசோதாவில் இல்லாத அம்சங்களை வைத்து எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம் மக்கள் 70 ஆண்டுகளாக தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் இவ்வளவு பெரிய நில வங்கியிலிருந்து அவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை.வக்பு சொத்துகள் ஏன் சாதாரண, ஏழை மற்றும் அடிமட்ட முஸ்லிம்களின் நலனுக்காக பயன்படுத்தப்படவில்லை? இந்த சொத்துகள் பொதுவான முஸ்லிம்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
வருவாய் குறைவு
2004-ம் ஆண்டு நிலவரப்படி 4.9 லட்சம் சொத்துகள் வக்பு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவற்றின் வருமானம் வெறும் ரூ.163 கோடி. 2013-ம் ஆண்டு திருத்தத்துக்குப்பிறகு வெறும் ரூ.3 கோடி அதிகரித்து ரூ.166 கோடியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய நில வங்கி இருந்தும், இத்தனை சிறிய வருவாய் கிடைப்பதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. இது குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் கோடியாகவாவது வந்திருக்க வேண்டும்.
சொத்துக்கள் பறிபோகாது
ஏழை முஸ்லிம்களுக்காக இந்த சொத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற வக்பு மசோதா தேவையாகும். இது எதிர்காலத்துக்குரியதாக இருக்கும். யாருடைய சொத்தையும் பறிப்பதாக இருக்காது.தற்போதைய நிலையில் சுமார் 8.72 லட்சம் சொத்துகள் வக்பு வசம் உள்ளன. அவை திறமையாக நிர்வகிக்கப்பட்டு இருந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் அதிர்ஷ்டமும் நிச்சயம் மாறியிருக்கும்.
நாடாளுமன்ற குழு
ஆகவே வக்பு சொத்துகளின் சிறந்த செயல்பாடு, வெளிப்படைத்தன்மை உறுதி, சிக்கல்களுக்கு தீர்வு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்துக்காக நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய மசோதாவை நாங்கள் கொண்டுவருகிறோம். இந்த விவகாரத்தை பரிசீலித்த நாடாளுமன்றக்குழுவுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் 97.27 லட்சத்துக்கு அதிகமான புகார்கள், கருத்துகள், ஆலோசனைகள் வந்தன.
25 மாநிலங்களில் கவலை
மேலும் மசோதா குறித்து சுமார் 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை வழங்கின. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் தங்கள் கவலைகளை தெரிவித்தன. சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள் என பலரும் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்திருந்தார்கள்.
மாநில அரசு கட்டுப்பாடு
இவ்வளவு விரிவாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்டு உள்ள இந்த மசோதா மூலம் வெறும் ஓராண்டுக்குள்ளேயே நீங்கள் மாற்றத்தை பார்க்க போகிறீர்கள்.. ஒரு புதிய விடியல் வரும். இதனை பொதுவான முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள். நிலம் ஒரு மாநிலப்பட்டியல் அம்சம் என்பதால் வக்பு வாரியம் மீதான முழு அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும். வக்பு வாரியங்களை மாநில அரசே நியமிக்கும். மத்திய அரசுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.. பழங்குடியினர் பகுதியில் எந்த சொத்தையும் வக்பு சொத்தாக அறிவிக்க முடியாத வகையில் மசோதாவில் வழிமுறை உருவாக்கி உள்ளோம்" இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சிகள் தாக்கு
பின்னர் வக்பு வாரிய திருத்த மசோதா மீது கடும் விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விவாதித்தனர். வக்பு வாரிய திருத்த மசோதா, நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பு மீதான தாக்குதல் என்று வாதிட்டனர். அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றும் சிறுபான்மை சமூகங்களை அவமதிக்கும் என்றும், இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும், சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி,ஆம் ஆத்மி உள்பட அத்தனை எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

நள்ளிரவில் நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி எம்பிக்களும் வந்திருந்தார்கள். நள்ளிரவு 12 மணி வரை சூடான விவாதம் நடந்தது. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நள்ளிரவு 12 மணிக்கு மேல் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதில் வக்பு வாரிய மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது.
ஆதரவு எதிர்ப்பு எவ்வளவு
மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கும் நிறைவேறினால், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு நாட்டில் சட்டமாக அமலுக்கு வந்துவிடும்.












Click it and Unblock the Notifications