"வக்பு என்பது இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி இல்லை.." சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முன்வைத்த வாதம்
டெல்லி: மத்திய அரசின் வக்பு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே இன்று 2வது நாளாக வழக்கு விசாரணை தொடர்கிறது.
வக்பு சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தது. இருப்பினும், அந்தச் சட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு
நேற்றைய தினம் மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். வக்பு என்று அறிவிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க சட்டப்பூர்வமாக அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக துஷார் மேத்தா மேலும், "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நிலம் அரசுக்குச் சொந்தமாக இருந்து.. அது வக்பு நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த நிலத்தை அரசு காப்பாற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. வக்பு என்பது தர்மம் தவிர வேறு எதுவும் இல்லை.. மேலும், அது இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி இல்லை.
இன்றியமையாத பகுதி இல்லை
வக்பு என்பது இஸ்லாத்தில் வெறும் தர்மம் மட்டுமே. தர்மம் என்பது அனைத்து மதங்களிலும் ஒரு பகுதியாக இருக்கிறது.. கிறிஸ்தவத்திற்கும் இருக்கிறது... இந்துக்களுக்கும் ஒரு தான முறை உள்ளது. சீக்கியர்களுக்கும் அது இருக்கிறது" என்றார்.
மேலும், புதிய சட்டத்தின் படி, முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நீண்ட காலமாக ஒரு நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தால் அதை வக்புவாக கருத அனுமதிக்கிறது. இதைச் சுட்டுக்காட்டிய துஷார் மேத்தா, "விதிகள் இப்படி இருக்கும் போதிலும், வக்பு சட்டத்தின் மூலம் வக்பு சொத்துக்கள் அபகரிக்கப்படும் என்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. நாட்டை தவறாக வழிநடத்தவே இதுபோல பொய்களைப் பரப்புகிறார்கள்.
தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்த்துள்ளோம்
இப்போது அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்தங்கள் பிரிட்டிஷ் மற்றும் அதன் பிறகு அமைந்த மத்திய அரசுகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளைக் கூட தீர்ப்பதாக இருக்கிறது. 1923 முதல் இருந்த அச்சுறுத்தலை ஒழித்து வருகிறோம். இதில் அனைத்து தரப்பினரிடமும் கருத்தும் கேட்கப்பட்டது. 96 லட்சம் பிரதிநிதித்துவங்கள் கிடைத்தன. கூட்டு நாடாளுமன்றக் குழு 36 அமர்வுகளில் இதை விவாதித்தன" என்றார்.
இதுவரை இந்த வழக்கில் நடந்த விசாரணை
முன்னதாக ஏப்ரல் மாதம் இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. கடந்த மே 5ல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தான் விரைவில் ஓய்வு பெறவுள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதில் விரிவான விசாரணை தேவைப்படுவதால் புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார்.
மத்திய அரசு கோரிக்கை
அதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் உள்ள அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "முன்னதாக மூன்று விஷயங்களை மட்டுமே சுப்ரீம் கோர்ட் எழுப்பியிருந்த நிலையில், அதற்கான பதிலை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளோம். புதிய விஷயங்களை இப்போது எழுப்பும் நிலையில், ஏற்கனவே எழுப்பப்பட்ட மூன்று விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
வாதங்கள்
ஆனால், அதற்கு மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கபில் சிபில் தனது வாதத்தில், "வக்பு நிலங்களைக் கைப்பற்றுவதையே இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டது.. வக்பு சொத்துக்கள் பறிக்கப்படும் வகையில் சட்டம் இருக்கிறது. 5 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்கவேண்டும் என்கிறார்கள். மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவர் வக்பு சொத்து வழங்க விரும்பினால், அவர் முஸ்லீம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்ற வாதத்தை முன்வைத்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான சிங்வியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோல ஒரு மதத்தை 5 ஆண்டுகள் பின்பற்றியதற்கு எந்த மத அறக்கட்டளையில் சான்றுகளைக் கேட்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். புதிய சட்டத்தின் கீழ் ஒரு சிக்கல் எழுந்தாலே அது வக்பு என்ற அந்தஸ்தை இழக்கும் வகையில் இருப்பதாகவும் சிங்வி குறிப்பிட்டார். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை வக்பு போர்டில் சேர்ப்பது குறித்தும் ஆட்சேபனை எழுப்பப்பட்டது.
மீண்டும் விசாரணை
முன்னதாக வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாய், "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" என்றும் கூறியிருந்தார். நேற்றைய தினம் மொத்தம் 3.45 மணி நேரம் விசாரணை நடந்தது. இதற்கிடையே இரண்டாவது நாளாக இன்றும் இந்த வழக்கில் விசாரணை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications