சபாஷ்!விருது வாங்கும்போது கலங்கி நின்ற ராணுவ வீரரின் தாயார்.. குடியரசு தலைவர் செய்த நெகிழ்ச்சி செயல்
டெல்லி; விருது வழங்கும் நிகழ்ச்சியில் கண் கலங்கி நின்ற வீரரின் தாயால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்தப் பெண் இருக்கும் இடத்திற்குச் சென்று விருதை அளித்தார்.
ராணுவத்தில் வீரதீர சாதனைகளைப் புரிந்தவர்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை அளித்துக் கவுரவித்து வருகிறார்.
அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகனை இழந்த தாய் அழுகையை அடக்க முடியாமல் தவித்த போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
பொதுவாக, இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது பெறும் ராணுவ வீரர் அல்லது அவரது குடும்பத்தினர் தான் குடியரசுத் தலைவரிடம் சென்று விருதுகளை வாங்குவார்கள். ஆனால், கடந்த 2019இல் பயங்கரவாதிகள் தாக்குதலில் தனது மகனை இழந்த தாய் ஒருவர், விருது வாங்கக் குடியரசுத் தலைவரிடம் செல்லும் முன் அழுகை அடக்க முடியாமல் அப்படியே நின்றுவிட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்தப் பெண் இருக்கும் இடத்திற்குச் சென்று விருதை அளித்தார்.

வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் ஜம்மு காஷ்மீர் சிறப்புக் காவல் அதிகாரி பிலால் அகமது மக்ரேயின் தாயார் சாரா பேகம் விருது வாங்கச் செல்கிறார். அப்போது பயங்கரவாத தாக்குதலின் போது பலத்த காயமடைந்த பின்னரும் கூட, அவரது மகன் அப்பாவி மக்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதை விளக்கினர். இதைக் கேட்ட சாரா பேகத்தால் கண்ணீர் அடக்க முடியவில்லை. அப்போது தான் குடியரசுத் தலைவரே அந்தத் தாயிடம் வந்து வீர் சக்ரா விருதை வழங்கினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்ட சாரா பேகம், அங்கிருந்த மூத்த அமைச்சர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தார். அங்கிருந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உணர்ச்சிவசப்பட்ட தாயாருக்கு அறுதல் கூறினார். இந்த வீடியோவை தற்போது பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

என்ன நடந்தது
கடந்த 2019இல் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளைப் பிடிக்கச் சென்ற போது, அங்கிருந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை பிலால் அஹ்மத் மக்ரே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த போதிலும் மக்ரே துணிச்சலுடன் பயங்கரவாதிகளுடன் போராடி பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினார். அதிக ரத்தம் வெளியேறியதால் சுயநினைவை இழக்கும் வரை பிலால் அஹ்மத் மக்ரே தொடர்ந்து பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார். இவரது இந்த வீரதீர செயலால் தான் அங்கிருந்த பொதுமக்களும், இதர வீரர்களும் பத்திரமாக அங்கிருந்த தப்பினர்.

அபிநந்தனுக்கும் விருது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின்போது தீரத்துடன் போராடி பாக் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனுக்கும் வீர் சக்ரா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். துல்லிய தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. அப்போது உலக நாடுகள் பாகிஸ்தானுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications