ப்ளீஸ்.. சிந்து நதி நீரை திறந்து விடுங்க.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பறந்து வந்த 4 கடிதம்
டெல்லி: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு சிந்து நதியில் இருந்து தண்ணீர் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் 22 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் ப்ளீஸ் தயவு செய்து சிந்து நதி நீரை திறந்து விடுங்கள் என்று கெஞ்சி பாகிஸ்தான் 4 கடிதங்களை நம் நாட்டுக்கு எழுதியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலாப் பயணிகளை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ஏவுகணைகளை வீசி பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளங்களை அழித்தது. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நம் நாடு முடித்து கொண்டது.

முன்னதாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. அதாவது சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.
இதில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த்ததை நம் நாடு நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே மீண்டும் சிந்து நதிநீர் பற்றி யோசிக்கலாம் என்று நம்நாடு தெரிவித்துவிட்டது. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இந்த சிந்து நதி நீர் என்பது முக்கிய நீராதாரமாகும். பாகிஸ்தான் மக்கள்தொகை 24 கோடி என்ற நிலையில் 22 கோடி பேரின் விவசாயம், குடிநீருக்கு இந்த சிந்து நதிநீர் தான் முக்கியமானதாக உள்ளது.
தற்போது சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் மக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் நம்நாட்டிடம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் நம் நாடு ஏற்கவில்லை.
இந்நிலையில் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த முடிவை இந்தியா திரும்ப பெற வேண்டும். பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய தண்ணீரை முறையாக விடுவிக்க வேண்டும் என்று நம் நாட்டிடம் கெஞ்சி பாகிஸ்தான் சார்பில் 4 கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்தாசா சார்பில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்ததை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்னும் மத்திய வெளியுறவுத்துறை இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் என்பது ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications