செல்லாது செல்லாது..கேரளாவில் ’இந்தியா’ கூட்டணி! மல்லுக்கட்டும் மார்க்சிஸ்ட்.. சமாளிப்பாரா பிரியங்கா?
டெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும் இரு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த தேர்தல்களில் கூட்டணியாக தேர்தலை சந்தித்த காங்கிரஸ், கேரளாவில் இந்தியா கூட்டணியில் இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த இரு தேர்தல்களில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருந்த பாஜக தற்போது கூட்டணி கட்சி ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்த நிலையில் வயநாடு தொகுதியில் சுமார் 4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி பெரிய வெற்றி பெற்றார்.
இதை அடுத்து ஒரு தொகுதியில் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த தொகுதியில் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்தது. வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் எனவும் அதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும் நாடு முழுவதும் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 23ஆம் தேதி வாக்கு கள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அந்த கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கேரளாவில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில் செல்லக்கரா சட்டப்பேரவை தொகுதியில் ரம்யா ஹரிதாசும், பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் ராகுல் மம்கூடத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினை காங்கிரஸ் தேசிய செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் போட்டியிடும் பிரியங்கா காந்தி கடும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. கடந்த சில தேர்தல்களை காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்தித்தது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும் பூனையுமாக இருப்பவை. கடத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர் எதிர் துருவங்களாக தேர்தலை சந்தித்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியான எல்டிஎப்-ம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியான யூடிஎஃப்-ம் தேர்தலை சந்தித்தன. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில், இந்திய கம்யூனிஸ்ட்,கேரளா காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஸ்ட்ரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (பி), இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருந்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்), கேரளா ஜனநாயக கட்சி, புரட்சி கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் இருந்தன.
இது தவிர பாஜகவும் போட்டியிட்டு சுரேஷ் கோபியை எம்பியாக பெற்றதோடு, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியையும் வழங்கியது. எனவே இந்த தேர்தலிலும் மும்முனை போட்டி இருக்கும் என்பதால் பிரியங்கா காந்தி கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications