காணோம்! காணோம்! மோடி- அமித்ஷாவை காணோம்! கோரஸ் பாடிய எதிர்க்கட்சி எம்பிக்கள்- மொத்தமாக சஸ்பெண்ட்!
டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நாளில் மீண்டும் தாக்குதல் நடந்தது குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி குரல் எழுப்பிய லோக்சபா எம்.பி.க்கள் 15 பேர் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த 15 பேரில் தமிழ்நாட்டு எம்பிக்கள்தான் அதிகம்.
நாடாளுமன்றத்தில் 2001-ம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நாளில் மர்ம ந்பர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை பொருட்களை வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்ற இரு சபைகளிலும் இந்த விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதனால் இன்று இரு சபைகளின் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து லோக்சபாவில் மொத்தம் 15 எம்.பிக்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், சுப்பராயன் உள்ளிட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கனிமொழி எம்பி கூறியதாவது: நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்பி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மஹூவா மொய்த்ரா விவகாரத்தில் விசாரணையை முடிவடையாமல் அவரை தகுதி நீக்கம் செய்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்த போது ஏன் பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்கவில்லை? பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சரும் சபைக்கு வந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுதானே கேட்கிறோம். ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளின் எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருப்பது எப்படி சரியானதாக இருக்கும்? என்றார்.
இதேபோல காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதில் ஏன் மத்திய அரசு இப்படி பிடிவாதமாக இருக்கிறது? எங்களது குரல்களை ஒடுக்கும் வகையில் 15 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதானே வலியுறுத்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications