பாலியல் தொல்லை! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது ஆக்ஷன் எப்போது? மத்திய அரசை எச்சரித்த சாக்சி மாலிக்
டெல்லி: ஜூன் 15ம் தேதி வரை தான் டைம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து இதுதான் நடக்கும் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மத்திய அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாஜக எம்பியாகவும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும் இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மீது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரிடெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்னைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் பிரிஜ் பூஷணை கைது செய்யவில்லை. மாறாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அங்கு பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் 3 நாளுக்கு முன்பு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டு பற்றி விசாரித்து ஜூன் 15க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைத்துள்ளனர். மேலும் டெல்லி போலீசார் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட வீராங்கனைையை நேற்று பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்று சம்பவம் குறித்து நடித்து காட்ட கூறினர்.
இந்நிலையில் தான் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ‛‛எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்போம். ஏனென்றால் நாங்கள் தினமும் மனதளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாது'' என காட்டமாக தெரிவித்தார்.
அதேபோல் மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா கூறுகையில், ‛‛ஜூன் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன்பிறகு பெரிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுவாம்'' என மத்திய அரசை எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications