நிதிஷ் + நாயுடு + ஷிண்டே டூ பஸ்வான் வரை.. எங்களுக்கு இதெல்லாம் வேண்டும்.. தலைசுற்றி நிற்கும் பாஜக
டெல்லி: மத்தியில் கூட்டணி கட்சிகள் தயவோடு மீண்டும் பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தான் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான், குமாரசாமி, மஞ்சி உள்ளிட்டவர்கள் பாஜகவுக்கு வைத்த முக்கிய ‛டிமாண்ட்’ குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2014, 2019 ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டாலும் கூட மத்தியில் ஆட்சியமைப்பதற்கு தேவையான 272 இடங்களை தாண்டி பாஜக மட்டுமே ஜெயித்தது. இதனால் கூட்டணி கட்சிகள் உதவியின்றி கடந்த 10 ஆண்டுகளான பிரதமர் நரேந்திர மோடியால் சுதந்திரமாக செயல்பட முடிந்தது.

ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 272 எம்பிக்கள் கிடைக்கவில்லை. 240 எம்பிக்கள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளனர். இதனால் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க உள்ளது.
கூட்டணி கட்சிகளான ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசனோ உள்பட 13 கட்சிகளுக்கு மொத்தம் 52 எம்பிக்கள் உள்ளனர். இதன்மூலம் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய உள்ளது. இந்த ஆட்சிக்கு மொத்தம் 292 எம்பிக்களின் ஆதரவு இருக்கும்.
நிதிஷ் - நாயுடு போர்க்கொடி! பாஜகவிடம் பீகார் - ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்பது ஏன்? பின்னணி
இந்நிலையில் தான் இன்று டெல்லியில் நடக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி எம்பிக்கள் மற்றும் தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு நரேந்திர மோடி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் அனுமதி கோர உள்ளார். அதன்பிறகு வரும் 9 ம் தேதி மாலை 6 மணிக்கு 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே தான் தங்களின் தயவு இருந்தால் மட்டுமே மத்தியில் ஆட்சியில் இருக்க முடியும் என்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவுக்கு ஏராளமான கோரிக்கைகளை அடுக்கி நிறைவேற்றி தரும்படி கூறியுள்ளனர். அதன்படி நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்பட பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பாஜக மேலிட தலைவர்களிடம் வைத்துள்ள கோரிக்கைகளின் விபரம் தனித்தனியே வருமாறு:
சந்திரபாபு நாயுடு: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியை சேர்ந்த 16 பேர் எம்பியாக வெற்றி பெற்றுள்ளனர். பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்து 2வது பெரிய கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. இதனால் லோக்சபா சபாநாயகர் பதவியை கேட்டுள்ளார். மேலும் 7 முதல் 8 மத்திய கேபினட் அமைச்சர் பொறுப்பையும் ஒரு மத்திய இணை அமைச்சர் பொறுப்பையும் கேட்டுள்ளார்.
பாஜகவை பயத்திலேயே வைக்கும் நிதிஷ் குமார்.. மோடி - அமித்ஷா எப்படி சமாளிக்க போகிறார்கள்? புது தலைவலி
அதோடு சாலை போக்குவரத்து, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறை, விவசாயத்துறை, ஜல் சக்தி துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை, கல்வித்துறை உள்ளிட்ட கேபினட் அமைச்சர் பொறுப்பையும், மத்திய இணை அமைச்சர் பிரிவில் நிதித்துறையையும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தையும் அவர் கூறியுள்ளார்.
நிதிஷ் குமார்: பீகார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது கட்சியை சேர்ந்தவர்கள் பீகாரில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் நிதிஷ் குமார் 3 கேபினட் அமைச்சர் பொறுப்புகளை கேட்டுள்ளார். அதேபோல் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அவர் கோரியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த 7 பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே ஒரு கேபினட், 2 மத்திய இணையமைச்சர் பொறுப்பை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிராக் பஸ்வான்: எல்ஜேபி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் கட்சி பீகாரில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஒரு கேபினட், ஒரு மத்திய இணையமைச்சர் பொறுப்பை அவர் கேட்டுள்ளார். சிராக் பஸ்வானும் எம்பியாக உள்ளதால் அவருக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
எச்ஏஎம் (எஸ்): ஹிந்துந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் தனக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு தர வேண்டும் என கோரியுள்ளார்.
ஜேடிஎஸ்: கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி போட்டியிட்டது. இதில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்த நிலையில் மண்டியா, கோலாரில் இந்த கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் மண்டியாவில் முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் மாநில தலைவருமான குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் கேபினட் அமைச்சர் பொறுப்பில் விவசாயத்துறை அல்லது நீர்ப்பாசனத்துறையை அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் கேபினட் அமைச்சர் பொறுப்பை கேட்டுள்ளதால் பாஜக தலைவர்கள் தலை சுற்றிப்போய் உள்ளன. தற்போது இவர்கள் தங்களின் கோரிக்கையை வைத்தாலும் கூட அதில் இன்னும் இறுதி முடிவு என்பது எடுக்கப்படவில்லை. இன்று டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தான் அமைச்சர் பதவி தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அதன்பிறகு பிரதமர் மோடி ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications