இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்னென்ன.. அப்துல் கலாம் உள்பட அதிரடி காட்டிய தலைவர்கள் யார் யார்?
டெல்லி: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்று பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் ஜனாதிபதிகளின் அதிகாரங்கள் என்ன? என்பது பற்றியும், அதிரடியாக செயல்பட்ட ஜனாதிபதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் முதல் குடிமகன் என்பவர் ஜனாதிபதி தான். நேரிடை அதிகாரங்கள் இல்லாமல் இருந்தாலும் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டங்களை நாட்டில் நிலைநிறுத்துவதில் ஜனாதிபதிக்கு முக்கிய பங்கு உள்ளது.
மேலும் அரசியலமைப்பு பிரிவு 74 ஜனாதிபதியின் அதிகாரம் பற்றிய விளக்கம் அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என கூறுகிறது.

ரப்பர் ஸ்டாம்ப் பதவியா ஜனாதிபதி?
இதனால் தான் நாட்டின் முதல் பிரதமர் நேரு, ‛‛ஜனாதிபதி பதவி என்பது ஆட்சி செய்யவோ, நிர்வாகம் செய்யவோ இயலாத ஒன்று'' என கூறியிருந்தார். இதனால் தான் பல வேளைகளில் ஜனாதிபதி பதவியை ‛ரப்பர் ஸ்டாம்ப் ' பதவி என விமர்சனம் செய்வார்கள். ஆனாலும் கூட பல ஜனாதிபதிகள் தங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு மத்திய அரசை கடுமையாக எதிர்த்துள்ளனர். அந்த வகையில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் என்ன?, யாரெல்லாம் ஜனாதிபதி அதிகாரத்தை ஆக்ரோஷமாக பயன்படுத்தினர் என்பது பற்றிய விபரம் வருமாறு:

ராஜேந்திர பிரசாத்
நாட்டின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவர் ராஜேந்திர பிரசாத். அதோடு தொடர்ந்து 2 முறை ஜனாதிபதி பதவி வகித்த பெருமையை கொண்ட ஒரேஒரு நபர் இவர் தான். 1950 ஜனவரி மாதம் 26ம் தேதி முதல் 1962 மே் மாதம் 13 ம் தேதி வரை ஜனாதிபதியாக செயல்பட்டார். மத்தியில் பெரும்பான்மை கொண்ட அரசு ஆட்சியில் இருந்தாலும் கூட அது ஜனாதிபதியை கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் செயல்பட்ட வரலாற்றை இவர் படைத்தார். அதாவது பிரதமர் நேருவுடன் சுமூக உறவு இல்லாத நேரத்தில் 1947 காலக்கட்டத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அறிக்கைகள் விட்டு விமர்சனம் செய்து வந்தார்.

நீலம் சஞ்சீவ ரெட்டி
1979 காலக்கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமர் சரண்சிங் இடைக்கால பிரதமராக இருந்தார். இவர் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டாமல் 7 சட்ட முன்மொழிவுகளை மேற்கொண்டார். இதனை ஜனாதிபதியாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் 3 வாரத்துக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.

ஜெய்ல் சிங்
1984ல் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, ஜனாதிபதியாக இருந்த ஜெய்ல் சிங், ராஜிவ் காந்தியை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதாவது காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரை தேர்வு செய்வதற்கு முன்பு ஜெய்ல் சிங் பிரதமரை நியமித்தார். இதன்மூலம் நெருக்கடி சூழலில் பிரதமரை நியமிக்கும் தடையில்லா உரிமையும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு எனக்கூறி அதிரடி காட்டினார். மேலும் தபால் தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் ‛பாக்கெட் வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு இருந்தார்.

கே.ஆர்.நாராயணன்
1997 ஜூலை 25 முதல் 2002 ஜூலை 25 வரை
ஜனாதிபதியாக இருந்த கேஆர் நாராயணன் அரசின் அனுமதி இல்லாமல் பல அறிக்கைகளை வெளியிட்டார். மரபுகளை மீறி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். மேலும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் கூறினார். அதாவது 1997 ல் உத்தர பிரதேச மாநிலம் கல்யாண்சிங் அரசு அரசை டிஸ்மிஸ் செய்யும் அமைச்சரவையின் முடிவை ஏற்கவில்லை. ஆயினும் 1998 ல் பீகாரில் ராப்ரிதேவி அரசை டிஸ்மிஸ் செய்தார்.

அப்துல் கலாம்
நாட்டின் 11வது ஜனாதிபதியான தமிழகத்தின் ஏபிஜே அப்துல்கலாம் சிறப்பாக செயல்பட்டார். காங்கிரஸ் அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த நிலையில் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதி அதை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாம் என சட்டத்திருத்தம் இருந்தது. அதோடு 2 முறை தண்டனை பெற்ற அரசியல்வாதியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் தேர்தல் கமிஷனின் விதியையும் இந்த சட்டம் தளர்த்தியது. இதற்கு அப்துல் கலாம் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். அதன்பிறகு 2வது முறையாக திருத்தம் செய்யாமல் அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு அப்துல் கலாம் ஒப்புதல் கொடுத்தார். அரசிலமைப்பு சட்டப்படி ஜனாதிபதி ஒரு முறை மட்டுமே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்ப முடியும் என்பதால் தான் இதற்கு அப்துல் கலாம் ஒப்புதல் வழங்கினார்.

பிரணாப் முகர்ஜி
நாட்டின் 13வது ஜனாதிபதியான காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியும் அதிரடியான செயலில் ஈடுபட்டார். இவரது பதவிக்காலத்தில் அருணாச்சல் பிரதேச மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜகோவா என்பவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து அவரை பதவியில் இருந்து அதிரடியாக பிரணாப் முகர்ஜி நீக்கினார்.
Recommended Video

பிற அதிகாரங்கள் என்ன?
இதுதவிர நாடாளுமன்றத்தின் 2 அவைகளிடையே ஏதாவது சட்டரீதியான பிரச்னை உருவானால் இரண்டு அவைகளையும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் சாசன ரீதியான உயர் நிலைப் பதவிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு. ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர் என்ற பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கவும், மாற்றவும், நிறுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. தூக்குத் தண்டனையை மாற்றி குற்றவாளிக்கு கருணை அளிக்கவும் ஜனாதிபதிக்கு அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications