"பதில் சொல்லுங்க பிரதமரே.." பிஎம் கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்கள்! காங். எழுப்பிய 7 முக்கிய கேள்வி
டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அத்துமீறிய நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி எழு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ச்சியாக மோதல் போக்கே நிலவி வருகிறது. அதிலும் 2020இல் நடந்த கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. அதன் பிறகு இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்தது.
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில், கடந்த டிச. 9ஆம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில், சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. இருப்பினும், அப்போது சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பாதிப்பு இல்லை
இந்த மோதலில்ல இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. மோசமான காயமும் கூட யாருக்கும் ஏற்படவில்லை. இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்திலும் விளக்கமளித்திருந்தார். இருப்பினும், இப்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா-சீனா மோதல் தொடர்பாக ஏழு கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ், இது தொடர்பாகப் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்
எல்லை விவகாரத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். "பிரதமரே. பதில் சொல்லுங்கள்" என்று பதிவிட்டு காங்கிரஸின் கேள்விகளை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "இந்த ஏழு கேள்விகளுக்குப் பதில் வழங்குவது பிரதமரின் அரசியல் கடமை மற்றும் தார்மீக பொறுப்பு. இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.. கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை விட்டு விட்டு பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என்றும் அவர் பதிவிட்டிருந்தார்..

காங்கிரஸ் கேள்வி
1. 2020ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி, கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்று சொன்னது ஏன்?
2. மே 2020க்கு முன்பு வரை நமது ராணுவம் கிழக்கு லடாக்கில் வழக்கமாக ரோந்து பணிகளைச் செய்து வந்த இடங்களுக்கு நமது படைகளைச் சீனா தடுத்ததுள்ளது. இதை ஏன் அனுமதித்தீர்கள்?
3. 2013, ஜூலை 17ஆம் தேதி மவுண்டன் ஸ்டிரைக் கார்ப்ஸ் அமைக்க அமைச்சரவை எடுத்த முடிவு ஏன் கைவிட்டீர்கள்?

பிஎம் கேர்ஸ்
4. PM CARES நிதிக்குச் சீன நிறுவனங்கள் நிதியளிக்க ஏன் அனுமதித்தீர்கள்?
5. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. இதை அனுமதித்து ஏன்?
6. எல்லை நிலவரம் குறித்தும், சீனாவிடம் இருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஏன் அனுமதிக்கவில்லை?
7. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நீங்கள் 18 முறை சந்தித்துள்ளீர்கள்... சமீபத்தில் இந்தோனேசியாவில் கூட சந்தித்தீர்கள். அதன் பிறகும் அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது. நீங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?

நாடாளுமன்றம்
இப்படி மொத்தம் 7 கேள்விகளைச் சீனா எழுப்பியுள்ளது. அருணாச்சல பிரதேச அத்துமீறலுக்குப் பிறகு காங்கிரஸ் தொடர்ச்சியாக இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகிறது. நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், எல்லை விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications