பிரியாணியில் 'லெக்பீஸ்' இல்லையா.. ரொம்ப கோவக்காரர் ஆச்சே.. கல்யாண மாப்பிள்ளையே இப்படியா?
டெல்லி: பிரியாணியில் 'லெக்பீஸ்' இல்லை என்பதற்காக கோபப்பட்டு கல்யாண வீட்டை போர்களம் ஆக்கி உள்ளார்கள் திருமண வீட்டார். ஐஸ் கிரீம் ஒரு கப் சேர்த்து தராவிட்டாலே மக்கள் மல்லுக்கு நிற்பார்கள் .. பிரியாணியில் லெக்பீஸ் இல்லை என்றதும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளையே கோதாவில் குதித்துவிட்டார்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது. ஆனால் திருமணம் சந்தோஷமாக நடக்க வேண்டுமா அல்லது சண்டையுடன் முடிய வேண்டுமா என்பதை உறவினர்களே முடிவு செய்கிறார்கள். அதேநேரம் கல்யாண விருந்தில் ரசம் ஊற்றி சாப்பிட வேண்டுமா அல்லது பிரியாணி சாப்பிட வேண்டுமா என்பதை நமக்கு முன் பந்தியில் உட்காருபவர்கள் முடிவு செய்கிறார்கள்.

நமது ஊரில் திருமண விருந்து சைவம் அல்லது அசைவம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். இதில் அசைவம் என்றால் பிரியாணி தான் பிரதானமாக இடம் பெறுகிறது. கல்யாணத்தில் மட்டுமல்ல, குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் இப்போது சிக்கன் பிரியாணி முக்கிய இடம் பெறுகிறது. பிரியாணி என்றால் அதில் லெக்பீஸ் எனப்படும், பெரிய கோழி இறைச்சித் துண்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. ஆனால் கோழிக்கு என்னமோ இரண்டு கால் தான் என்பதால் எல்லாருக்குமே லெக் பீஸ் உடன் பிரியாணி போடுவது சவாலானது. அதேநேரம் பிரியாணியில் இறைச்சி இல்லை என்றால் அது குஸ்காவாகிவிடும்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி நகரில் ஒரு திருமணவிழாவில் லெக்பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய ரகளையே ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடந்த கல்யாண விழாவில் பிரியாணியை லெக்பீஸ் இல்லாமல் போட்டதற்கு பெரிய சண்டையே நடத்தி உள்ளார்கள் மனமகன் வீட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி நகரில் நடந்த திருமண விருந்தில் மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டிருக்றிது. அதில் சிலருக்கு லெக்பீஸ் இறைச்சித் துண்டு கிடைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் அதை பெரிய பிரச்சினையாக்கினர். முதலில் வார்த்தையாக தொடங்கிய பிரச்சினை வாக்குவாதம், கைகலப்பாக வளர்ந்து களேபரமானது.
ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையும் கோதாவில் இறங்கி, தங்கள் தரப்பினருக்காக சண்டை போட ஆரம்பித்தார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பிரியாணியில் லெக்பீஸ் கேட்டவருக்கு கண்ட இடங்களில் எல்லாம் அடி உதை விழுந்தது. அப்போது சிலர் ஆவேசத்தில் அங்கிருந்த நாற்காலிகளையும் தூக்கி வீசி உடைத்தனர்.
இந்த மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால் அந்த காட்சிகள் வேகமாக பரவியது. ஆனால் இதுபற்றி போலீசில் யாருமே புகார் அளிக்கவில்லை. போலீசாரோ புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications