காஷ்மீரில் கடைசியாக நடந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியது யார்! மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாஜக
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இப்போது சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்பு அங்கு 2024இல் தேர்தல் நடந்த போது, அங்கே அரசியல் சூழல் எப்படி இருந்தது. அதில் வென்று ஆட்சியை அமைத்தது யார்? அதன் பிறகு அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டு கடைசியாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2019இல் காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

காஷ்மீர்: இதற்கிடையே இப்போது காஷ்மீரில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப். 18, செப்.25 மற்றும் அக்.1 என 3 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அக். 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இப்போது தேர்தல் அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே தேர்தல் நடந்த போது என்ன சூழல் இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
2014 தேர்தல்: கடந்த 2014ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. அப்போது மாநிலத்தில் 87 தொகுதிகள் இருந்தன. அப்போது அங்கிருந்த பல பிராந்திய கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தன. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அங்கே மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
அப்போது முதல்வராக இருந்த உமர் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொண்டன. இவை தவிர பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் தனித்துப் போட்டியிட்டன. 87 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 44 இடங்கள் தேவை என்ற சூழலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேர்தல் முடிவுகள்: மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகபட்சமாக 28 இடங்களில் (22.9%) வென்ற நிலையில், பாஜக 25 (23.2%) இடங்களில் வென்றன. ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி 15 இடங்களிலும் (21%) காங்கிரஸ் 12 இடங்களிலும் (18.2%) வென்றன. சுயேச்சைகள் 3 இடங்களை (6.9%) வாக்குகளைப் பெற்றனர். அப்போது அதிக இடங்களில் வென்ற மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.
இருப்பினும், இதற்கிடையே சில காலம் அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. தொடர்ந்து 2015 மார்ச் 1ம் தேதி காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது சயீத் பதவியேற்றார்.
என்ன நடந்தது: கடந்த 2016ம் ஆண்டில் முப்தி முகமது சயீத் உயிரிழந்த நிலையில், அங்கு சில காலம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிறகு முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார். தொடர்ந்து 2018இல் பிடிபி உடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. பெரும்பான்மை இல்லாததால் மெகபூபா முஃப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல பிராந்திய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைக்கத் தயாராகின. இருப்பினும், மாநிலச் சட்டசபை கலைக்கப்படுவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார்.
இதையடுத்து 2018 டிசம்பர் 20ம் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓராண்டு கழித்து காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகள் காஷ்மீரில் மாநில அரசே இல்லை. இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்போது காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலி்ல பாஜக 24.6% வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் வென்றன. தேசிய மாநாட்டுக் கட்சியும் 2 இடங்களில் வென்றன. ஆனால், 22.4% வாக்குகளை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 14.8% வாக்குகளுடன் ஒரு இடத்தை பெற்றது.












Click it and Unblock the Notifications