"தெற்கு+ வடக்கு.." ராகுல் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இதுதான் காரணம்! காங்கிரஸ் பக்கா பிளான்
டெல்லி: ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளிலும் வென்ற நிலையில், அவர் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்.. இது காங்கிரஸை எப்படிப் பலப்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் அவர் மிகப் பெரிய வெற்றி பெற்றார்.

நமது நாட்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், இரண்டு வாரங்களில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். ராகுல் காந்தி எந்த தொகுதியை ராஜினாமா செய்யப் போகிறார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.
வயநாடு தொகுதி: இரு தொகுதி மக்களையும் நேரில் சந்தித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். இந்தச் சூழலில் தான் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியைத் தக்க வைப்பதாகவும் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். அத்தோடு வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு பதிலாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் இந்த முடிவை எதற்காக எடுத்தது.. இது காங்கிரஸுக்கு எப்படி பலன் தரும் என்று பார்க்கலாம்.
காரணம் என்ன: வரும் காலங்களில் நடக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வடக்கு மற்றும் தெற்கே வலுவான மக்கள் செல்வாக்கு இருக்கும் தலைவர் தேவை என்பதைக் கருதியே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கும் என கூறப்படுகிறது. இது வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களுக்குக் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. ஒன்று ரேபரேலி.. இத்தனை காலம் சோனியா காந்தி இந்த தொகுதி எம்பியாக இருந்தார். அவர் உடல்நல பிரச்சினைகளால் ராஜ்யசபாவுக்கு சென்ற நிலையில், அங்கு இந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டு வென்றார். அடுத்து அமேதி.. கடந்த 2019 தேர்தலில் ராகுல் இங்கு அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இப்போது இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் வந்துள்ளது. அதிலும் சோனியாவின் நீண்டகால விசுவாசியான கே.எல்.சர்மாவா இங்கு வென்றுள்ளார். இது காங்கிரஸுக்கு உபியில் தேவையான உத்வேகத்தையும் அடித்தளத்தையும் அளிக்கிறது.
உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் 2027 தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.. காங்கிரஸ் இந்த லோக்சபா தேர்தலில் உபியில் 6 இடங்களில் வென்ற நிலையில், சட்டசபைத் தேர்தலில் இதை அதிகரிக்கவே பார்க்கும்.
2019-ல் ரேபரேலியில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை அங்கு 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி அதிகபட்சமாக 37 இடங்களில் வென்றது. அங்கு இந்தியா கூட்டணி 43 சீட்களில் வென்ற நிலையில், பாஜகவால் 33 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக மிக வலுவாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் பெற்ற இந்த வெற்றி மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து நடக்கும் 2027 தேர்தலில் இதே கூட்டணி யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் சவாலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேகம் இல்லை: இதுவே ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைக்க முக்கிய காரணமாகும். அதேநேரம் ராகுல் காந்தியின் இந்த முடிவு உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி மற்ற வட மாநிலங்களிலும் எதிரொலிக்கும். இந்த முறை 99 சீட்களில் வென்ற காங்கிரஸ், வரும் காலத்தில் விட்ட இடத்தை பிடிக்க வட மாநிலங்கள் முக்கியம். குறிப்பாக பாஜக வலுவாக உள்ள இந்தி பெல்ட்டில் காங்கிரஸ் தனது இருப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்த முடிவு பெரியளவில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தென் இந்தியாவைப் பொறுத்தவரைக் கர்நாடகா, தெலுங்கானா என இரு மாநிலங்களில் காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் உள்ளது. லோக்சபாவிலும் இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கடந்த முறையைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்றுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியில் உள்ளது.
கேரளாவில் என்ன பிளான்: கேரளாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இடதுசாரிகள் தான் ஆட்சியில் உள்ளன. அங்குக் கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தான் மாறி மாறி வென்றுள்ள.. 2021இல் தான் இது மாறி முதல்முறையாக இடதுசாரிகள் ஆட்சியைத் தக்கவைத்தது. ஆனால், 2026 தேர்தலில் அங்கும் ஆட்சியைப் பிடிக்க முடியும் எனக் காங்கிரஸ் நம்புகிறது.
ராகுல் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தது கேரள மக்களுக்குச் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், கேரளாவில் பிரியங்கா காந்தியை தவிர வேறு ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த அதிருப்தி அதிகரித்து இருக்கும். ஆனால், இதைச் சரியாகக் கையாண்ட காங்கிரஸ் பிரியங்காவை அங்குக் களமிறங்கி இருக்கிறது. நேற்று இது தொடர்பான அறிவிப்பு வந்த போதே, எம்பியாக இல்லை என்றாலும் தொடர்ந்து வயநாட்டிற்கு வருவேன் என ராகுல் கூறினார். மேலும், நாங்கள் இருவருமே ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளுக்கும் எம்பிகள் தான் என்றார் பிரியங்கா.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது காங்கிரஸ் விட்ட இடங்களைப் பிடிக்க முயலும் காங்கிரஸின் அடுத்தகட்ட முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. வட இந்தியாவுக்கு ராகுல் காந்தி, தென்னிந்தியாவுக்குச் சோனியா காந்தி என முடிவு செய்திருப்பது போலவே தெரிகிறது. இதற்கு எந்தளவுக்குப் பலன் கிடைக்கும் என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications