டெல்லி புதிய மதுபான கொள்கை என்றால் என்ன! கெஜ்ரிவால் முதல் சிசோடியா வரை.. சிறை செல்ல காரணமே இதுதான்
டெல்லி: கெஜ்ரிவால் ஆட்சியில் கடந்த 2021 இறுதியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கை ஆம் ஆத்மி கட்சிக்கு இப்போது வில்லனாக மாறியுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி பலரும் சிறை செல்ல இந்த புதிய மதுபான கொள்கை காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஆம் ஆத்மி கட்சியை ஆட்டிப்படைக்கும் இந்த மதுபான கொள்கை என்ன.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2021 பிப்ரவரி மாதம் தான் இவை எல்லாம் தொடங்கியது. அப்போது டெல்லியில் அமலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது.

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
புதிய மதுபான கொள்கை என்ன: அப்போது டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் தான் மதுபான விற்பனையை நிர்வகிக்கும் கலால் இலாகாவும் இருந்தது. இதனால் அவர் புதிய மதுபான கொள்கையை உருவாக்குவதில் அவர் முக்கிய நபராக இருந்தார். அந்த புதிய மதுபான கொள்கை டெல்லியில் மது விற்பனையை தனியார்மயமாக்குவதை அனுமதித்தது.. மேலும், மது விற்பனையில் அரசின் தலையீட்டை நிறுத்துவதே அந்த மசோதாவின் நோக்கமாகும்.
மேலும், மது விற்பனையில் தனியார் நிறுவனங்களையும் அந்த புது பாலிசி அனுமதித்தது. மாநிலத்திற்கான கலால் வருவாயை உயர்த்தவே இந்த நடவடிக்கையை எடுத்தனர். கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த புது பாலிசிபடி மது விற்பனையில் மாநில அரசு ஈடுபடாது.. அதற்குப் பதிலாகத் தனியார் நிறுவனங்களுக்கு மது விற்பனை செய்ய உரிமங்கள் வழங்கப்படும்.
உரிமங்கள்: இந்த மதுபான கடைகளை இயக்க ஆண்டு உரிமக் கட்டணத்தை 8 லட்சத்தில் இருந்து 75 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. புதிய மதுபான கொள்கைபடி, டெல்லி மொத்தம் 32 மண்டலங்களாகப் பிரிக்கப்படும். இதில் 8-10 வார்டுகள் அடங்கும்.. ஒவ்வொரு வாட்டும் சுமார் 27 மதுபான கடைகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு முனிசிபல் வார்டிலும் 2-3 மதுக் கடைகள் இருக்கும்.
கட்டுப்பாடுகள் நீக்கம்: விஷ சாராயத்தை ஒழிக்கவும், மது குடிப்போருக்கு நல்ல அனுபவத்தைத் தரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவர மதுபானங்களுக்குத் தள்ளுபடி தர அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை 3 மணி வரை மதுபானங்களை விற்கவும் அனுமதி தரப்பட்டது. டெல்லியில் மது அருந்தும் வயது 25ஆக இருக்கும் நிலையில், அதை 18ஆகக் குறைக்கவும் முன்மொழியப்பட்டது.. இருப்பினும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த வயது வரம்பு மட்டும் மாற்றி அமைக்கப்படவில்லை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் தந்த அதிரடி விளக்கம்
இந்த புதிய பாலிசி டெல்லி துணைநிலை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சில நிபந்தனைகளுடன் டெல்லி துணை நிலை ஆளுநர் அதற்கு அனுமதியும் அளித்தார். இருப்பினும், இது அமலுக்கு வந்த உடனேயே சர்ச்சையானது. முதலில் இந்த புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் அளித்ததே காங்கிரஸ் கட்சி தான். அதன் பிறகு பாஜகவும் புகார் அளிக்கவே துணை நிலை ஆளுநர் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணையைத் தொடங்கியது. இந்த புதிய மதுபான கொள்கை சர்ச்சையான நிலையில், ஆகஸ்ட் 1, 2022இல் அது ரத்து செய்யப்பட்டது.
கைதுகள்: இருப்பினும், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இதன் விசாரணையைத் தொடர்ந்தது. அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதில் சத்யேந்திர குமார் ஜெயின் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மணிஷ் சிசோடியா, டிஆர்எஸ் கட்சியின் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இறுதியில் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications