சுதந்திர தினம் 2024: சட்டையில் குத்தும் தேசிய கொடியை என்ன செய்வது? கவனம்! சிறைக்கு கூட போக நேரிடும்
டெல்லி: இன்று நாம் நமது நாட்டின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இன்று பள்ளி, கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவது வழக்கம். அதேநேரம் பலருக்கும் இந்த மூவர்ணக் கொடியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்குத் தனியாகச் சட்டம் இருப்பது பலருக்கும் தெரியாது. அதை நாம் பாலோ செய்யவில்லை என்றால் சிறைத் தண்டனை கூட கிடைக்கலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சுதந்திர தினத்தை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களை நாம் நினைவு கூர்வோம்.

சுதந்திர தினம்: இதற்காக நாடு முழுக்க கொண்டாட்டங்கள் நடைபெறும். அதேநேரம் விழாக்கள் முடிந்த பின்னரும் மூவர்ணக் கொடியை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.. இந்தியத் தேசியக் கொடியானது தேசத்தின் பெருமை மற்றும் இறையாண்மையை அடையாளப்படுத்துகிறது.. தேசியக் கொடிகளை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காகக் கடந்த 2002ம் ஆண்டு Flag Code of India கொண்டு வரப்பட்டது. அதில் நாம் நமது தேசியக் கொடியை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு வேலை எதிர்பாராத விதமாகத் தேசியக் கொடி சேதமடைந்ததால் என்ன செய்ய வேண்டும் என்பது இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தேசிய தொடியை நிச்சயம் எந்தவொரு பொது இடத்திலும் பறக்கவிடக்கூடாது. சேதமடைந்த கொடியைத் தனிப்பட்ட முறையில், தேசியக் கொடியின் கண்ணியம் குன்றாத வகையில் எரிப்பதன் மூலமோ அல்லது வேறு எந்த முறையின் மூலமோ அழிக்கப்பட வேண்டும். இதைத் தான் ஆங்கிலத்தில் "as a whole in private, preferably by burning or any other method considering the dignity of the National Flag" என்று சட்டம் சொல்கிறது.
செய்யக்கூடாது: நமது மூவர்ணக் கொடியை நிச்சயம் தூக்கி எறியவோ, தரையில் வீசவோ கூடாது. இது நமது மூலம் மூவர்ணக் கொடி எந்த விதமான அவமரியாதைக்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. சேதமடைந்த கொடியின் கண்ணியம் குறையாத வகையில் கையாளப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று நாம் காகிதக் கொடிகளைச் சட்டையில் குத்திக்கொள்வோம். குறிப்பாக மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லும் போது ஆர்வமாகத் தேசியக் கொடியைச் சட்டையில் குத்திக் கொள்வார்கள். காகிதத்தால் செய்யப்படும் இந்த தேசியக் கொடிக்கும் நாம் முழு மரியாதையைத் தர வேண்டும். இந்த காகிதக் கொடியைக் கண்டிப்பாகத் தரையில் கூடாது. முன்பு சொன்னதை போலவே தேசியக் கொடியின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில், தனிப்பட்ட முறையில் இதை அப்புறப்படுத்த வேண்டும்.
தண்டனைகள்: இந்த வழிகாட்டுதல்களை மீறினால் The Prevention of Insults to National Honour Act, 1971 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தேசியக் கொடியை அவமரியாதை செய்வது அல்லது முறையாக அகற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
தேசியக் கொடியை அரசு நிச்சயமாகத் திரைச்சீலைகளைப் போலப் பயன்படுத்தக் கூடாது.. தேசியக் கொடியை இடுப்புக்குக் கீழே அணியும் ஆடை, சீருடை அல்லது அணிகலனாக நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. கைக்குட்டைகள், உள்ளாடைகள் என எந்த ஆடையிலும் மூவர்ணத்தை எம்பிராய்டரியாக பயன்படுத்தக்கூடாது. தேசியக் கொடியில் வேறு எதையும் எழுதக்கூடாது.. கொடி தரையைத் தொடுவது போல இருக்கக்கூடாது. அலட்சியமாகத் தண்ணீரில் போடக்கூடாது.
கடுமையான சட்டம் ஏன்: இவை தான் நமது நாட்டில் தேசியக் கொடியை எப்படி கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதை விளக்கும் சட்டங்களாக இருக்கிறது. அதேநேரம் சுதந்திர தினம் என்பது தேசப்பற்றைக் கட்டியெழுப்பும் ஒரு நாள். இந்த நாளில் மூவர்ணக்கொடியை அனைவரும் கொண்டாட்டமாக வைத்திருக்கும் நிலையில், இதுபோன்ற சட்டங்கள் தேவை தானா ஒரு தரப்பினர் கேட்கிறார்கள்.
இது தொடர்பாக வழக்கறிஞர் நீலாவதியிடம் கேட்ட போது, "சுதந்திர தினம் என்பது கொண்டாட்டம் என்பதைத் தாண்டி நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நினைவுகூரும் நாள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதும் நாள். எனவே, மூவர்ணக் கொடியை நிச்சயம் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டது: நமது நாட்டில் கிட்டதட்ட அனைத்தையும் அரசியலாக்கிவிட்டார்கள். ஆனால், நமது மூவர்ணக்கொடி மட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, அதற்குத் தர வேண்டிய மரியாதையை நாம் நிச்சயம் தர வேண்டும். தேசியக் கொடிக்கான மரியாதையைத் தரவில்லை என்றால் Prevention of Insults to National Honour Act கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த சுதந்திர தினத்தில் நாம் அடுத்த தலைமுறைக்குப் போராடிப் பெற்ற சுதந்திரத்தை விளக்குவதுடன் மூவர்ணக் கொடிக்கு எப்படி உரிய மரியாதை தர வேண்டும் என்பதையும் கற்றுத் தர வேண்டும்.












Click it and Unblock the Notifications