டெல்லியை உலுக்கிய மரணம்! காரில் இழுத்து செல்லப்பட்ட பெண் பலாத்காரம்? பரபர பிரேத பரிசோதனை ரிப்போர்ட்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் 14 கிமீ காரில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கொடூரம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அங்குப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிய இளம் பெண், காரின் அடியே இழுத்துச் செல்லப்பட்டு, கொடூரமாக உயிரிழந்தார்.
நாட்டையே அதிர வைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் இருவர் சம்பவம் நடந்த போது மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

கொடூர விபத்து
இந்தச் சம்பவத்தில் டெல்லியைச் சேர்ந்த 20 வயதே ஆன அஞ்சலி சிங் உயிரிழந்தார். அதிகாலை நேரத்தில் காரில் செல்லும் போது, அவர்கள் ஸ்கூட்டியை இடித்துள்ளனர். அப்போது பெண்ணின் உடல் காருக்கு அடியே சிக்கியுள்ளது. இருப்பினும், இப்படியே அவர்கள் பல கிமீ தூரத்திற்குக் காரை இழுத்துச் சென்றுள்ளனர். அங்குக் கடை வைத்திருந்த ஒருவர், தான் காரை நிறுத்த முயன்றதாகவும் இருப்பினும் அவர்கள் நிறுத்தவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இது எதிர்பாராத விபத்து போலத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இதை மறுத்த அவர்கள், தங்களுக்கு காருக்கு அடியே பெண் சிக்கியது தெரியவில்லை என்றனர்.

தயார் சந்தேகம்
அதேபோல இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாயாரும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அஞ்சலியின் தயார் ரேகா கூறுகையில், "அஞ்சலி ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். புத்தாண்டு அன்று நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதாகவும் திரும்பத் தாமதமாகும் என்றும் அவர் கூறினார். அவருக்காக நான் காத்திருந்தேன்.. காரில் மட்டும் சிக்கியிருந்தால்.. உடைகள் எல்லாம் எப்படி இல்லாமல் போகும்.. போலீசார் அவரது உடலைக் கூட எங்களுக்குச் சரியாகக் காட்டவில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும்'' என்று சந்தேகம் கிளப்பியிருந்தார்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள்
பெண்ணின் தாயாரே இது குறித்து சந்தேகம் கிளப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பெண்ணின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாலியல் வன்கொடுமையை நிராகரிப்பதற்கான தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். கடந்த ஜனவரி 1ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட அந்த பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்தன.

காயங்கள் இல்லை
அதிக தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் தலை மற்றும் முதுகில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.. மேலும், அவரது உடலில் காயங்களும் கைகள் மற்றும் கால்களில் விரிவான சிராய்ப்புகள் இருந்தன. அதேநேரம் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படாததால், பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை என்று பிரேதப் பரிசோதனை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. விபத்து மற்றும் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் தான் அந்த பெண் உயிரிழந்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அமித் கண்ணா, தீபக் கண்ணா, அப்பகுதியில் ரேஷன் கடை வைத்திருக்கும் உள்ளூர் பாஜக தலைவர் மனோஜ் மிட்டல், ஸ்பானிஷ் கலாச்சார மையத்தில் பணிபுரியும் கிரிஷன் மற்றும் சிகையலங்கார நிபுணர் மிதுன் என ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐந்து பேரும் புத்தாண்டைக் கொண்டாடி விட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசார்
இந்த விபத்து ஏற்பட்ட போது அனைவரும் குடிபோதையில் இருந்ததை கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர். விபத்து நடந்த போது தீபக் கண்ணா வாகனத்தை ஓட்டினார்.. அமித் கண்ணா, மனோஜ் மிட்டல், கிரிஷன் மற்றும் மிதுன் ஆகியோர் காரில் அமர்ந்திருந்தனர். பல கிமீ வாகனத்தை ஓட்டிச் சென்ற பிறகு தான், அவர்களுக்குப் பெண் உடல் காரில் சிக்கியுள்ளதே தெரிய வந்துள்ளது. அதன் பிறகும் கூட பெண்ணுக்கு உதவாமல்.. அவர்கள் அந்த இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications