"கல்யாணம்!" 100 பேருக்கு மேல் வர கூடாது! ஆனந்த் சீனிவாசனாக மாறிய காங் எம்பி! திரும்பி பார்த்த லோக்சபா
டெல்லி: ஆடம்பர திருமணங்களைத் தடை செய்யும் வகையில் காங்கிரஸ் எம்பி கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
"வீடு கட்டிப்பார்.. திருமணத்தைச் செய்து பார்.." என்று ஒரு பழமொழி இருக்கிறது. வீட்டைக் கட்டுவதும் திருமணத்தைச் செய்வதும் அந்தளவுக்கு கடினம். அதிலும் குறிப்பாகப் பல நூறு பேர் கலந்து கொள்ளும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பது என்பது மிகப் பெரிய பணிதான்.

அதிலும் இந்தியாவில் திருமணம் என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஊரே வியக்கும் வகையில் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள பலரது ஆசையாக இருக்கிறது. இதற்காக அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
கல்யாணம்: வெளிநாடுகளைப் போல இல்லாமல் நம்ம ஊரில் 500, 1000 பேர் கலந்து கொள்ளும் திருமணங்கள் எல்லாம் ரொம்பவே சாதாரணமாக நடக்கும். திருமணம் என்ற அந்த ஒரே ஒரு நாளில் நடக்கும் விஷயங்களுக்குப் பல வருடச் சேமிப்பை வாரி இறைப்பார்கள். ஒரு தரப்பினர் இதுபோன்ற செலவுகள் எல்லாம் தேவையே இல்லாத ஒன்று என்று தொடர்ந்து சொல்லி வந்தாலும் இப்படி செலவு செய்வதை இவர்கள் நிறுத்தவே மாட்டார்கள்.
இதற்கிடையே இது தொடர்பாக லோக்சபாவில் ஒரு புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. திருமண செலவைக் குறைக்கும் வகையில் அதிகபட்ச விருந்தினர்கள் உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. The Prevention of Wasteful Expenditure on Special Occasions Bill 2020 என்ற பெயரில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
விவாதம்: ஆடம்பரமான கிப்டுகளுக்கு பதிலாக ஏழை, எளியோர், அனாதைகள் அல்லது சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி ஜஸ்பிர் சிங் கில் அறிமுகப்படுத்திய இந்த தனிநபர் மசாதோ கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து பஞ்சாப் காங்கிரஸ் எம்பி ஜஸ்பிர் சிங் கில் கூறுகையில், "இந்த மசோதா ஆடம்பரமான திருமணங்களின் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறது.. குறிப்பாக இவை மணமகளின் குடும்பத்திற்கு அதீத நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. ஆடம்பர திருமணங்களுக்குச் சொத்துகளை விற்பது, கடன் வாங்குவது எனப் பல சம்பவங்கள் இங்கே தொடர்ச்சியாக நடக்கிறது. திருமணங்களுக்கான வீண் செலவினங்களைக் குறைப்பது என்பது பெண் சிசுக்கொலைகளை கூட தடுக்கும்
தொடவே இல்லை: கடந்த 2019இல் பக்வாராவில் நடந்த ஒரு திருமணத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது தான் இந்த தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை நான் முடிவு செய்தேன்.. இன்று மொத்தம் 285 வகை உணவுகள் பரிமாறப்பட்டது. அதில் 129 உணவுகளை ஒரு ஸ்பூன் கூட யாரும் எடுக்கவில்லை... அவை அனைத்தும் வீணானது. அது எனது மனதை ரொம்பவே பாதித்தது. அதைத் தொடர்ந்தே இந்த மசோதாவை கொண்டு வர நான் முடிவு செய்தேன்" என்றார்.
மேலும், இனி வரும் காலத்தில் தனது மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைக்கும் போது அதிகபட்சம் 30 முதல் 40 விருந்தினர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

100 விருந்தினர்கள்: இந்த மசோதாவின்படி திருமணத்திற்கு இரு தரப்பில் இருந்தும் 100 விருந்தினர்களுக்கு மேல் அழைக்கக் கூடாது. அதிகபட்சம் 10 வகை உணவுகளை மட்டுமே பரிமாற வேண்டும்.. பரிசுகள் பொருட்கள் மதிப்பு ரூ.2,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆடம்பரமான பரிசுகளுக்குப் பதிலாக, ஏழைகள், அனாதைகள் அல்லது சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு நன்கொடைகள் வழங்கலாம்.
அதேநேரம் திருமணத்திற்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா கொண்டு வரப்படுவது முதல்முறை இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த பாஜக எம்பி கோபால் ஷெட்டி என்பவர் இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டு வந்தார். அதுவும் திருமண செலவுகளைக் குறைக்கவே இருந்தது. இது கேட்க நன்றாக இருந்தாலும் கூட இதுபோன்ற தனிநபர் மசோதாக்கள் நிறைவேற்றி சட்டமாக மாறுவது ரொம்பவே அரிதானது.












Click it and Unblock the Notifications