டைம் கேட்ட உதயநிதி.. ஓகே சொன்ன மோடி.. அமித் ஷா வேறயா.. "ட்வின்" சந்திப்பின் பின்னணி என்ன?
அமைச்சர் ஆன பின் உதயநிதியின் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
டெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின் முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுஉள்ளார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு இன்று செல்ல உள்ளார்.
அங்கே இருக்கும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதையடுத்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்த உள்ளார்.

சந்திப்பு
பல்வேறு முக்கிய திட்டங்கள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டிய விளையாட்டு திட்டங்கள் குறித்து அவர் கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக சில மனுக்களை அளிக்க உள்ளார். மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடக்கிறது. இதற்கு பல மாநில அரசியல் தலைவர்கள் வருகிறார்கள். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வருகிறார்கள். இவர்களை எல்லாம் சந்தித்து அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இது போக வேறு சில அரசியல் தலைவர்களையும் உதயநிதி ஸ்டாலின் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார். அமைச்சர் ஆன பின் உதயநிதியின் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

டைம் கேட்ட உதயநிதி
இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்க நேற்று முதல்நாள் உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டார். அவர் நேரம் கேட்டது செவ்வாய் கிழமை காலை சந்திப்பிற்காக. ஆனால் செவ்வாய் கிழமை காலை பிரதமர் மோடிக்கு வேறு அலுவல் திட்டங்கள் இருந்ததால் நேரம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து மாலை சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படியே இன்று மாலை 5.30 மணி அளவில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சரியாக அரை மணி நேரம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பேச போகிறார்?
இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், இந்த சந்திப்பிற்கு பின் வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக நீட் விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேரடி கோரிக்கை வைப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று இதற்கான நேரம் கேட்கப்பட்டு இருந்த நிலையில், உடனே பிரதமர் அலுவலகம் உதயநிதி சந்திப்பிற்கு நேரம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நீட் விவகாரம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர்
அதோடு உள்துறை அமைச்சரையும் இன்று உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அமைச்சர் அமித் ஷாவுடன் நடக்கும் இந்த சந்திப்பில் இரண்டு விதமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளன. நீட் விலக்கு மசோதாவிற்கு உள்துறைதான் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். நீட் விலக்கிற்கு ஆதரவாக இந்த பரிந்துரையை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு தேசிய அளவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாகவும் அமித் ஷாவுடன் உதயநிதி ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications