"பேய்" ரயில்வே ஸ்டேஷன்! 42 வருஷமா காக்கா, குருவி கூட இங்க வரல! இது நம் நாட்டில்தான் இருக்கு தெரியுமா
டெல்லி: இந்தியாவில் மர்மமான ரயில் நிலையமாகக் கருதப்படும் ஒரு ஸ்டேஷன் குறித்து நாம் பார்க்கலாம். அதன் பின்னணி சற்று பகீர் அளிப்பதாகவே இருக்கிறது.
ஏகப்பட்ட மர்மங்கள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்த மர்மங்கள் குறித்து அறிய ஆசைப்பட்டே உலகெங்கும் இருந்து குறிப்பிட்ட அளவு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகிறார்கள். மத பழக்க வழக்கம் முதல் இந்தியச் சடங்குகள் வரை நமது நாட்டில் இருக்கும் அனைத்தையும் மேற்குலகத்தினர் வியந்தே பார்ப்பார்கள்.

மேலும், நமது இடத்தில் பேய், பிசாசுகள் இருப்பதாகக் கூறி பல இடங்கள் கைவிடப்பட்டு இருக்கிறது. பிரபலமாக இருக்கும் இந்த கைவிடப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல பலரும் ஆசைப்படுவதில்லை.
ரயில்வே நிலையம்: அப்படியொரு சபிக்கப்பட்ட ரயில் நிலையமாகக் கருதப்படும் ஒரு ஸ்டேஷன் குறித்து நாம் பார்க்கலாம். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புருலியா மாவட்டத்தில் ராஞ்சி பிரிவின் கீழ் இந்த ரயில் நிலையம் வருகிறது. அங்குள்ள மக்கள் இந்த ரயில் நிலையத்தின் பெயரைக் கேட்டாலே அரண்டு போய் ஓடிவிடுவார்கள். அந்தளவுக்கு அமானுஷ்யமான இடமாக இது இருக்கிறது.
இதனால் எந்தவொரு ரயில்வே ஊழியரும் இந்த ரயில் நிலையத்தில் வேலை செய்யத் தயாராக இல்லை. இதனால் கடந்த 42 ஆண்டுகளாக இந்த ரயில் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியே இருக்கிறது. இன்னுமே கூட ரயில்கள் இந்த ஸ்டேஷனை தாண்டி செல்லும் போது உள்ளே மயான அமைதியே இருக்கிறது. அதுவும் மதியம் வரை மட்டுமே இந்த வழியாக ரயில்கள் செல்லும். இருட்டிய பிறகு ஒரு ரயில் கூட இந்த பக்கமே வராது.
எங்கே இருக்கிறது: மேற்கு வங்கத்தில் பெகுன்கோடர் என்ற ரயில் நிலையம் தான் இப்படி இருக்கிறது. இந்த ஸ்டேஷன் எப்போதும் இப்படியே இருந்தது இல்லை. 1960களில் இந்த மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக இது இருந்தது. சுற்றிலுள்ள பல கிராம மக்களுக்கு இந்த ஸ்டேஷன் முக்கியமானதாக இருந்தது. அப்படியிருக்கும் போது 1967இல் நடந்த சம்பவங்கள் மொத்தமாக இதை மாற்றியது.
அப்போது ஒரு நாள் நள்ளிரவில் ரயில் பாதையில் பேய் ஒன்றைப் பார்த்தாக ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். வெள்ளைப் புடவை அணிந்து அந்த பேய் அங்கே சுற்றிச் சுற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப் பரவியது. தொடர்ந்து பலரும் இரவில் வெள்ளை புடவை அணிந்த பேய், பிசாசுகளைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் இப்படி பேயாக மாறியுள்ளதாக அனைவரும் கூறினர்.
பின்னணி: இருப்பினும், முதலில் இதை ரயில்வே துறை நிர்வாகிகள் யாரும் நம்பவில்லை. வழக்கம் போலவே ரயில்களை இயக்கினர், இருப்பினும், சில நாட்களில் அந்த ஸ்டேஷன் மாஸ்டரின் ஒட்டுமொத்த குடும்பமும் உயிரிழந்தது. அவர்கள் எப்படி உயிரிழந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இந்த மர்ம மரணம் அங்குப் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் யாரும் இங்கே வேலை செய்யத் தயாராக இல்லை.
பல மாதங்கள் தொடர்ந்து அங்கே ஸ்டேஷன் மாஸ்டரை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முயன்றது. இருப்பினும் யாருமே அங்கு வேலை செய்ய ரெடியாக இல்லை. இதனால் ரயில் நிலையத்தை மூடுவதாக ரயில்வே துறை அறிவித்தது. உடனடியாக அந்த ரயில்வே ஸ்டேஷன் பேய் ரயில்வே ஸ்டேஷனாக மாறியது. பொதுமக்கள் இந்த பக்கம் செல்லவே அச்சப்பட்டனர். பல ஆண்டுகள் இப்படியே மூடியே இருந்தது.
மாறியது: ஆனால், 1990களில் நிலைமை மாற தொடங்கியது. சிலர் இங்கே ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆண்டுகள் செல்ல செல்ல பலரும் வலியுறுத்தினர். மக்கள் கோரிக்கையை ஏற்றுக் கடந்த 2009இல் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது இந்த ரயில் நிலையத்திற்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இருப்பினும், இப்போதும் கூட ரயில்வே ஊழியர்கள் யாரும் இல்லை. முழுக்க முழுக்க தனியார் ஊழியர்களே இந்த ரயில் நிலையத்தை இப்போதும் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications