"பயங்கர ஆவேசம்.." ராகுல் சொன்ன அந்த ஒரு பதில்.. நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலக இதுதான் காரணம்
டெல்லி: இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ்குமார் இருந்தார்,

ஆனால், அவரே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
நிதிஷ்குமார்: இதற்கிடையே நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேற என்ன காரணம் என்பது குறித்தும் அங்கே பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்தும் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் நடந்த சம்பவங்களால் அதிருப்தியில் இருந்தாலும் கூட கடந்த ஜன. 13ஆம் தேதி தான் கூட்டணியில் இருந்து விலகும் முடிவைத் தீர்க்கமாக எடுத்துள்ளார்.
அன்றைய தினம் "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது ராகுல் காந்தி சொன்ன ஒரு பதிலே நிதிஷ்குமாரை ஆவேசமடையச் செய்துள்ளது. ராகுல் காந்தி மீது கோபம் கொண்ட அவர், 10 நிமிடம் முன்னதாகவே அந்த மீட்டிங்கில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
என்ன நடந்தது: அதாவது அன்றைய தினம் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடந்துள்ளது. அப்போது நிதிஷ்குமார் பெயரைப் பரிசீலனை செய்துள்ளனர். இருப்பினும், ஒருங்கிணைப்பாளராக யாரைப் போடலாம் என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதே நிதிஷ்குமாரை கோபத்தில் தள்ளியுள்ளது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா மற்றும் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே மம்தாவுடன் ஆலோசிக்கலாம் என்று ராகுல் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமாருக்கு இந்த பதில் கோபத்தை ஏற்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் இப்போது கூறுகின்றனர்.
கோபம்: அதன் பிறகு ஆலோசனை நடந்த நிலையில், அனைத்து தலைவர்களும் இணைந்து கன்வீனர் பதவிக்கு நிதிஷ்குமாரை தேர்வு செய்தனர். ஆனால் கோபமடைந்த நிதிஷ்குமார், கன்வீனரை பதவியை லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கலாம் என்று கூறி நிராகரித்ததாகக் கூறுகின்றனர் இதில் விவரம் அறிந்தவர்கள்.
மேலும், இந்தியா கூட்டணிக்குத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு இதற்கு முன்பு நடந்த கூட்டத்தில் வந்த போது.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெயரை மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தனர். இதுவும் நிதிஷ்குமாரை கோபப்படுத்திய தெரிகிறது. எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவராகத் தன்னை முன்னிறுத்துவார்கள் என்று நிதிஷ்குமார் நினைத்ததாகவும் அது நடக்காததால் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக உடன் கை கோர்த்த போதும், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் நடப்பது தனக்கு விருப்பமில்லை என்றும் இதன் காரணமாகவே மீண்டும் பாஜக உடன் கை கோர்ப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications