காங். குழப்பம்.. ராஜஸ்தான் முதல்வராக தொடரும் கெலாட்? ரொம்பவே எதிர்பார்த்தாரே பைலட்! அப்போ அவருக்கு?
டெல்லி: ராஜஸ்தான் குழப்பம் காரணமாக கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இப்போது வரிசையாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அங்கிருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.
கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்கள் பலரும் தலைமையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராகச் சோனியா உள்ள நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் அதிகரித்தது. உடல்நிலை காரணமாகச் சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து வருகிறார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவர் பதவியை ஏற்கப் போவது இல்லை என்பதில் ராகுல் காந்தியும் தெளிவாக உள்ளார்.

வேட்புமனு
இந்தச் சூழலில் அக்.17ஆம் தேதி புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதில் சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்டை தான் களமிறக்க டெல்லி தலைமை திட்டமிட்டு இருந்தது.

அசோக் கெலாட்
இருப்பினும், கடைசி நேரத்தில் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் அனைத்தும் மாறியது. ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பம் டெல்லி தலைமை கோபத்தை ஆழ்த்தியது. கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களின் நடவடிக்கையால் விரைவில் கெலாட் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றும் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தொடர்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சச்சின் பைலட்
அதேபோல சச்சின் பைலட் மீண்டும் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கெலாட் வியாழக்கிழமை டெல்லியில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் தான், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவது இல்லை என்றும் அறிவித்தார்.

வருத்தம்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், "ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தேன். அடுத்தகட்ட நடவடிக்கையைச் சோனியா காந்தி முடிவு செய்வார். நான் என்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் தான். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன். ராஜஸ்தானில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து இருக்க வேண்டும். அது தவறான ஒன்று" என்று கூறி இருந்தார்.

ராஜஸ்தான் குழப்பம்
கடந்த வாரம் ராஜஸ்தான் புதிய முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இதைப் புறக்கணித்த கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இதற்கு போட்டியாகத் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் கெலாட் அரசைக் கவிழ்க்க முயன்ற சச்சின் பைலட்டை எப்படி முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கெலாட் காங்கிரஸ் தலைவரானால் தங்கள் தரப்பில் இருந்து தான் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்லி தலைமை
இது காங்கிரஸ் கட்சிக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே ராஜஸ்தான் முதல்வர் பதவி குறித்து ஓரிரு நாட்களில் சோனியா காந்தி முடிவு செய்வார் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறி இருந்தார். இந்தச் சூழலில் தான் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தொடர்வார் என்றும் சச்சின் பைலட் மீண்டும் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications