"நாட்டைப் பிரிக்க முயற்சி.." பீகார் சாதி வாரியான கணக்கெடுப்பு வெளியான நிலையில் பிரதமர் மோடி பரபர
டெல்லி: பீகார் அரசு சாதி வாரியான கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சில காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நாட்டில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதே இங்கு பல்வேறு கட்சிகளின் வலியுறுத்தலாக இருக்கிறது. இதற்கிடையே பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தியது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த சாதி வாரியான கணக்கெடுப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சாதி வாரியான கணக்கெடுப்பு: அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடியாக இருக்கிறது. அதில் 27.13% பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகும். மேலும், 36.01% மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 63.14% பேர் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். மேலும், 15.52% பொதுப் பிரிவினராகவும் 19.65%. பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவும் 1.69% பழங்குடி இன மக்களாகவும் உள்ளதாக அந்த சர்வே-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதி வாரியான கணக்கெடுப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திமுக எம்பி கனிமொழி ஆகியோரும் சாதி வாரியான கணக்கெடுப்பிற்கு வலியுறுத்தினர். இதற்கிடையே சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சாதி வாரியான கணக்கெடுப்பு தகவல்கள் வெளியாகி சில மணி நேரத்தில் பிரதமர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாட்டை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி இந்ச சர்வே அல்லது எந்தவொரு கட்சியையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவர் மறைமுகமாகத் தாக்கி பேசினார். மேலும், ஆட்சியில் இருந்தபோது வளர்ச்சி பணிகளைச் செய்யத் தவறியவர்கள், இப்போது ஏழைகளின் உணர்வுகளில் விளையாடுவதாகவும் அவர் கடுமையாகத் தாக்கி பேசினார். விரைவில் தேர்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, "ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடினார்கள். இப்போதும் கூட அவர்களை அதையே தான் செய்கிறார்கள்.. முன்பு சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள்... இப்போதும் அதைப் பாவத்தை அவர்கள் மீண்டும் செய்கிறார்கள்.. அன்று ஊழல் செய்து குவித்தவர்கள்.. இன்றும் ஊழல்வாதிகளாகவே உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். மேலும், சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் பாவம் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி தாக்கு: இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்துவோம் எனக் கூறியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, நாட்டை பிரிக்க முயல்வதாகவும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சி பாவம் என்றும் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக நாடு முழுக்க சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இன்று பீகாரில் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதையும் ராகுல் காந்தி வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications