தள்ளிப்போகும் லோக்சபா தேர்தல்? அருண் கோயல் ராஜினாமா.. தேர்தல் ஆணையத்தில் நடக்கப்போகும் மாற்றம்!
டெல்லி: லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதனால் லோக்சபா தேர்தல் தள்ளிப்போகுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அடுத்ததாக என்ன நடக்கும்? புதிய தேர்தல் ஆணையரின் தேர்வு எப்படி இருக்கும் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை 3 முக்கிய பொறுப்புகள் உள்ளன. ஒன்று தலைமை தேர்தல் ஆணையர் பதவி. இன்னொன்று தேர்தல் ஆணையர் பதவி. இதில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு ஒருவரும், தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு 2 பேரும் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் பொறுப்புகளில் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரிகள் தான் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.
அதேபோல் தேர்தல் ஆணையராக அருண் கோயல் இருந்தார். இன்னொரு தேர்தல் ஆணையர் பொறுப்பு காலியாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் நேற்று தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அவரது ராஜினாமா பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளன. லோக்சபா தேர்தல் என்பது இந்தியா முழுமைக்கும் நடக்கும். இப்படியான சூழலில் தான் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 தேர்தல் ஆணையர் பொறுப்புகள் காலியாக உள்ளன. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டும் பொறுப்பில் உள்ளார்.
இதனால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாகுமா? இல்லாவிட்டால் தேர்தல் தள்ளிப்போகுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் அருண் கோயல் ராஜினாமா செய்திருப்பதை வைத்து மத்திய பாஜகவை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன. இதனால் தற்போது இந்த விவகாரம் பூதாகரமானதாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் அடுத்து என்ன நடக்கும்? காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு நியமனம் எப்படி நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்றாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ புதியவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நியமனத்துக்கு என்று ஒரு வழிமுறை உள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர், தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்பது பற்றி மத்திய சட்ட அமைச்சர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தான் அதிகாரிகளை தேடும். இந்த தேடல் குழுவில் மத்திய அரசின் 2 முதன்மை செயலாளர்கள் இருப்பார்கள். இவர்கள் பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்களின் பின்னணி பற்றிய விபரங்களை சேகரித்து வழங்குவார்கள்.
இந்த குழு மொத்தம் 5 பேரின் பெயர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கும். தேர்வு குழு என்பது பிரதமர் தலைமையில் செயல்படும். தற்போது தேர்வு குழு தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்த குழுவில் பிரதமர் மோடி பரிந்துரைத்த 2 மத்திய அமைச்சர்கள், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இவர்கள் தேடல் குழு பரிந்துரைத்த 5 பேரில் ஒருவரை தேர்வு செய்து ஜனாதிபதி பரிந்துரைக்கு ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் அந்த நபர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்படுவார்கள்.
இதுதான் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் நடைமுறையாகும். தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் உள்ள நிலையில் 2 தேர்தல் ஆணையர் பொறுப்புகள் காலியாக உள்ளன. இந்த பொறுப்புகளுக்கு புதியவர்கள் மேற்கூறிய நடைமுறையில் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இந்த நடைமுறைகளை செயல்படுத்தி புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய சிறிது காலம் பிடிக்கும் என விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications