பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு.. அடுத்தது என்ன? 90 நாட்கள் தான் அவகாசம்! சிக்கல் இருக்கு!
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்து என்ன நடக்கும்?
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இந்த பரபரப்பான தீர்ப்பை எதிர்த்து, இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் 'சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இடையீட்டு மனுவில் சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த 2 மனுவும் உச்சநீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என ஏற்றுக்கொண்டார். அப்போது சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், இருவரும் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே பொன்முடி சரண் அடைய சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்ட விசாரணைக்கு மனு மீண்டும் விரைவில் பட்டியலிடப்படும்.
அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் 90 நாட்களுக்குள் விசாரித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தாலோ அல்லது தண்டனையை நிறுத்தி வைத்தாலோ, பொன்முடி சிறை செல்ல வேண்டியதில்லை. ஆனால், தீர்ப்புக்கு தடை விதிக்காமல், தண்டனையை நிறுத்தி வைக்காமல் இருந்தால், பொன்முடி சிறைக்குச் செல்ல நேரிடும்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, "பொன்முடி 22ஆம் தேதி சரணடைய மட்டுமே தற்காலிக விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு பறித்த அவரது எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை மீட்க 90 நாட்களுக்குள் அப்பீல் மனுவை விசாரணைக்கு கொண்டு வந்து வாதாடி முழுமையான தடை உத்தரவை அவர் பெறவேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications