இந்தியாவே எதிர்பார்க்கும் முக்கிய திட்டம்.. சந்திரயான் 3 எப்போது ஏவப்படும்? இஸ்ரோ முக்கிய தகவல்
டெல்லி: மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான் 3 விண்கலம் எப்போது ஏவப்படும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விண்வெளி துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.
இஸ்ரோ சார்பில் பல்வேறு விண்வெளி ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு விண்வெளி திட்டமும் உலக நாடுகளுக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைந்துள்ளது.

சந்திரயான்: அதிலும் குறிப்பாக இந்தியாவின் சந்திரயான் திட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 2008ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2ஐ இஸ்ரோ அனுப்பியது. அதில் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் மட்டும் பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தவிரச் சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனிடையே இந்தியா சந்திரயான் 3 திட்டத்திற்கு ரெடியாகிவிட்டது.
இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3ஐ விண்ணில் செலுத்தும் இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. யுஆர் ராவ் மையத்தில் இப்போது படுவேகமாக இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
எப்போது ஏவப்படும்: சந்திரயான்-3 ராக்கெட் நிலவின் நில அதிர்வு, அங்குள்ள பிளாஸ்மா சூழல், தனிம கலவை ஆகியவற்றை ஆராயும் கருவிகளைக் கொண்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான் 3 விண்கலம் ஜூலை மாதம் ஏவப்பட உள்ளது. இதற்கிடையே ஜூலை 12ஆம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இஸ்ரோ தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இது குறித்து இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சந்திரயான் 3 தனது பயணத்தைத் தொடங்கலாம்.. இறுதி தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்தார்.
எப்படி ஏவப்படும்: சந்திரயான் 3 தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம், ஏவும்போது ஏற்படும் கடுமையான அதிர்வைத் தாங்கும் திறனை உறுதிப்படுத்தும் அத்தியாவசிய சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சந்திரயான் திட்டத்தின் மூன்றாவது விண்கலமான இது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி (GSLV Mk III) என்ற ராக்கெட் மூலம் ஏவப்படும். இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் தான் இந்தியாவிடம் இப்போது இருக்கும் கனரக ஏவுகணையாகும்.
இது ப்ரோபல்ஷன், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று பகுதிகளைக் கொண்டு இருக்கிறது. சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 ராக்கெட்டின் தொடர்ச்சியாகும்.. இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கும் அங்கே சுற்றி தேவையான ஆய்வு செய்யத் தேவையான கருவிகளைக் கொண்டு இருக்கிறது.
சந்திரயான் 3 திட்டம் குறித்து சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், "துல்லியமான தரையிறங்குவதாகுவதே சந்திரயான்-3இன் முதன்மை நோக்கம். அதற்குத் தேவையான கருவிகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்" என்று கூறியிருந்தார். சமீபத்தில் அதீத வெப்பத்தைத் தாங்கும் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications